காருக்கு இஎம்ஐ செலுத்த முடியாததால் பெண்ணை கொன்று நகை பறித்தேன்.. கைதான வாலிபர் வாக்குமூலம்!!

203

பெரியநாயக்கன்பாளையம்: கோவையில் இளம்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் சிக்கிய பக்கத்து வீட்டு வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த ரேணுகா என்பவரை மர்ம நபர் தலையில் கத்தியால் வெட்டி படுகொலை செய்து அவர் கழுத்தில் இருந்த மூன்றரை பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்நிலையில், எதிர் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டதில் ஒரு நபர் வீட்டின் காம்பவுண்ட் சுவரை எட்டி குதித்து வீட்டில் நுழைந்து ஏழு நிமிடத்தில் வெளியேறுவது தெரியவந்தது.

இதனையடுத்து, நடத்திய விசாரணையில் பக்கத்து வீட்டில் இருந்த சதீஷ் (34) என்பவர் நகைக்காக இந்த கொலையை செய்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த சதீஷ், கடன் சுமை அதிகமாக இருந்ததால் காரை பைனான்ஸ் நிறுவனத்தில் அடமானம் வைத்திருந்ததும், அதற்கு பணம் செலுத்த முடியாமல் பக்கத்து வீட்டில் புகுந்து நகையை திருடசென்றபோது ரேணுகா சத்தம் போட்டதால் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தலையில் வெட்டி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்ததாகவும் போலீசார் கூறினர்.

அவரிடம் இருந்து மூன்றரை பவுன் சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் கொலையாளி கொலை நடந்த பிறகு தனது வீட்டிற்கு சென்று துணிகளை மாற்றி விட்டு உறவினர்களின் கூட்டத்தோடு ஒன்றும் தெரியாததுபோல் ரேணுகா வீட்டில் நின்று கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.