வெப்பம் தாங்காமல் கிணற்றுக்கு குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் பிணமாக மீட்பு!!

194

கரூர் மாவட்டம், ஆண்டான்கோவில் ஊராட்சி என்.புதூர் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற மூன்று மாணவர்கள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் சற்று கடுமையாகவே காணப்படுகிறது. தற்போது அனைத்து பள்ளிகளும் ஆண்டு தேர்வுகள் நிறைவு பெற்று கோடை விடுமுறை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து நீர் நிலைகளுக்கு படையெடுகத் தொடங்கி உள்ளனர். இதில் எதிர்பாராத விதமாக ஆங்காங்கே சில அசம்பாவித சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

அந்த வகையில், கரூர் மாவட்டம் ஆண்டான் கோவில் ஊராட்சி என்.புதூர் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (வயது 12), மாரிமுத்து (13), விஷ்ணு (13) நண்பர்களான இவர்கள் மூவரும் நேற்று மாலை குளிப்பதற்காக வீட்டிற்கு தெரியாமல் கிணற்று பகுதிக்குச் சென்றுள்ளனர்.

மூவரின் குடும்பத்தினரும், தங்கள் பிள்ளைகள் விளையாடச் சென்றிருப்பதாக நினைத்து இருந்துள்ளனர். பின்னர் இரவு நீண்டநேரமாகியும் சிறுவர்களை காணாததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் அவர்களை தேடியுள்ளனர்.

அப்போது மாயமான மூவரும் அருகில் உள்ள கிணற்றிற்கு குளிக்கச் சென்றதால் வேறு சில சிறுவர்கள் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அங்கு சென்று பார்த்தபோது கிணற்றின் அருகே சிறுவர்களின் காலணிகள், ஆடைகள் கிடந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு குழுவினர் கிணற்றில் இறங்கி தேடியபோது மூன்று மாணவர்களும், இறந்த நிலையில் மீட்கப்பட்டனர்.


இதனைத் தொடர்ந்து மூவரின் உடல்களும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூரில் ஒரே பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.