சென்னை சைதாப்பேட்டையில் மனைவி, குழந்தைகள் கண் முன்னே ரவுடியை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீராம்பேட் தெருவை சேர்ந்தவர் கௌதம்(27). இவரது மனைவி பிரியா(23). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் கௌதம் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டிருந்தார்.
அப்போது வீட்டின் கதவை யாரோ பலமாக தட்டியுள்ளனர். ஜன்னல் வழியாக கௌதம் எட்டி பார்த்த போது 6 பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நின்று கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் கௌதம் என்ன செய்வது என்று தெரியாமல் கதவை திறக்காமல் குடும்பத்துடன் உள்ளேயே இருந்தார். பொறுமை இழந்த கும்பல் கதவை உடைத்து உள்ளே சென்று மனைவி மற்றும் குழந்தைகள் கண்முன்னே சரமாரியாக வெட்டினர்.
பிரியாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த கௌதம் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதுதொடர்பாக தைசாப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கௌதமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மனைவியிடம் விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. அதில் தனது முன்னாள் கணவர் ராஜ்கிரண் தான் கௌதமை கொலை செய்ததாக தெரிவித்தார்.
இதனிடையே இந்த கொலை சம்பவம் தொடர்பாக பிரதீப் என்ற குள்ளு (26), சுரேஷ் (27), ராஜா என்ற ராஜாபாய் (28) ஆகிய 3 பேரும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களை தேனாம்பேட்டை போலீசார் சைதாப்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
3 பேரிடமும் நடத்திய விசாரணையில் பிரியாவின் முன்னாள் கணவர் ராஜ்கிரண் (31), சுகுமார் (26), மணி (26) ஆகியோருடன் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
கொலையான கௌவுதம் மற்றும் பிரியா இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்துள்ளனர். ஆனால் பிரியாவின் பெற்றோர் கௌவுதமுக்கு பெண் கொடுக்காமல் கௌதமின் நண்பர் ராஜ்கிரனுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
அதன்பிறகு அவர்களுக்கு 2 குழந்தைகள் பிறந்தன. ஆனாலும் கௌதம் மற்றும் பிரியா இருவரும் தங்கள் பழைய காதலை மறக்க முடியாமல் தவித்து வந்தனர். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதுதொடர்பாக பலமுறை மனைவியை கண்டித்துள்ளார்.
இதனால் பிரியா, கணவர் ராஜ்கிரணிடம் இருந்து பிரிந்து தனது குழந்தைகளுடன் காதலன் கெளவுதமுடன் சென்று கணவன்-மனைவி போல் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.
ஆனால் இதற்கு ராஜ்கிரண் தொடர்ந்து இடையூறு செய்து வந்ததால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொரட்டூரில் ராஜ்கிரனை ரவுடி கௌதம் மற்றும் மனைவி பிரியா ஆகியோர் அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றனர். இதில் அதிஷ்டவசமாக ராஜ்கிரன் உயிர் தப்பிவிட்டார்.
பிறகு கொரட்டூர் போலீசார் ரவுடி கௌதம் மற்றும் கள்ளக்காதலி பிரியா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சிறையில் இருந்து வெளியில் வந்த 2 பேரும் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.
தனது மனைவி மற்றும் குழந்தைகளை அபகரித்துக்கொண்டு கௌதம் குடும்பம் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாத ராஜ்கிரண், தனது நண்பர்களுடன் சேர்ந்து வீடு புகுந்து கௌதமை வெட்டி கொலை செய்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
மேலும், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரியாவின் முன்னாள் கணவர் ராஜ்கிரண், அவரது நண்பர்கள் சுகுமார், மணி ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றன.