இன்ஸ்டாகிராம் மூலம் காதல்.. ஒரே மாதத்தில் உயிரை மாய்த்து கொண்ட இளம் ஜோடிகள்!!

269

ரயில் வரும் நேரத்தில் தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருவரும் கட்டிப்பிடித்து நின்றுள்ளனர். சுற்றியிருந்தவர்கள் எச்சரிக்கை விடுத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் மோதி உடல் சிதறி இறந்தார்கள்.

கேரளாவில் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு மாதம் மட்டுமே காதலித்த ஜோடி தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்கள் வந்து விட்ட பிறகு காதல் என்ற விஷயத்தில் பல விபரீத சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் கேரள மாநிலம் கொல்லத்தில் நடைபெற்றுள்ளது.

அங்குள்ள கிளிக்கொல்லூர் பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பாக இளம் வயதுடைய ஆணும், பெண்ணும் அந்த வழியாக சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக கிளிக்கொல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடல்களை கைப்பற்றி அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர்.

இதில், ரயில் வரும் நேரத்தில் தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருவரும் கட்டிப்பிடித்து நின்றதாகவும், சுற்றியிருந்தவர்கள் எச்சரிக்கை விடுத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் மோதி உடல் சிதறி இறந்தார்கள் என தெரிவித்துள்ளனர். இதனை அடிப்படையாக கொண்டு இவர்கள் காதல் ஜோடியாக இருக்கலாம் என போலீசார் கண்டறிந்தனர். ஆனால் அவர்களை அடையாளம் காண முடியாமல் திணறினர்.

இப்படியான நிலையில் இறந்தவர்களில் அந்த இளைஞர் கொல்லம் சந்தனத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சசிதரன் என்பவரது மகன் அனந்து என்பது, அப்பெண் கொச்சி களமசேரி பகுதியைச் சேர்ந்த மது என்பவரது மகள் மீனாட்சி என்பதும் தெரிய வந்தது. ஆனந்து கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டும், மீனாட்சி 12 ஆம் வகுப்பும் படித்து வந்துள்ளனர்.


இதுதொடர்பாக போலீசார் தரப்பில் வெளியான தகவல்படி, இருவருக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னால் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.

சம்பவம் நடந்த அன்று சினிமா பார்க்க செல்வதாக கூறிவிட்டு ஆனந்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதேபோல் மீனாட்சி பள்ளியில் மதிப்பெண் சான்றிதழ் வாங்க செல்வதாக கூறி வெளியே சென்றுள்ளார். பின்னர் இருவரும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

காதலை வீட்டில் உள்ளவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதால் இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் கொல்லம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.