விடிய விடிய நடந்த விருந்தில் கொக்கெய்ன், ஹைட்ரோ கஞ்சா அடித்த நடிகைகள்.. பெங்களூருவில் நடந்தது என்ன?

192

பெங்களூருவில் பண்ணை வீட்டில் விடிய விடிய நடந்த விருந்தில் கலந்து கொண்ட நடிகைகள் போதை மருந்து உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணைக்கு ஆஜராகும்படி பெங்களூரு குற்றப்பிரிவு போலீஸார் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், பெங்களூவின் புறநகர் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் மே 19-ம் தேதி மதுவிருந்து நடந்தது. அப்போது அந்த வீட்டிற்குள் போலீஸார் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர் அவர்களைப் பார்த்த பலர், தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். இந்த விருந்தில் போதைப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்ப்டடது.

இந்த விருந்தில் தெலுங்கு திரையுலக பிரபலங்கள், ஐ.டி நிறுவன ஊழியர்கள் என நூற்றி ஐம்பது பேர் பங்கேற்றது கண்டறியப்பட்டது. இந்த விருந்தை ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபரான வாசுவின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்த நிகழ்வில் போதைப்பொருள் வியாபாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

தெலுங்கு நடிகை ஹேமா இந்த விருந்தில் பங்கேற்றதாக கூறப்பட்ட நிலையில், சம்பவம் நடந்த நாளில் தான் பெங்களூருவில் இல்லை என வீடியோ வெளியிட்டு இருந்தார்.

ஆனால், விருந்தில் கலந்து கொண்ட ஹேமா, தன் மீது அவமானம் வராமல் இருப்பதற்காக பண்ணை வீட்டின் ஒரு பக்கம் வந்து வீடியோ எடுத்ததாக பலர் கூறியுள்ளனர். ஹெப்பகோடி பண்ணை வீட்டிற்குள் அவர் வீடியோ பதிவு செய்து ஹைதராபாத் பண்ணை வீட்டில் இருப்பதாக பொய் சொல்கிறார் என்று பலர் வாதிட்டு வருகின்றனர்.


அதேபோல் மற்றொரு நடிகையான ஆஷி ராயும் தான் பண்ணை வீட்டில் நடந்த விருந்தில் பங்கேற்றேன். ஆனால், போதைப்பொருள் பயன்படுத்தியது பற்றியது எதுவும் தெரியாது என வீடியோ வெளியிட்டார்.

இந்நிலையில் மது விருந்தில் ஹேமா இருந்ததை பெங்களூரு போலீஸார் உறுதி செய்துள்ளனர். இந்த விருந்தில் பிடிபட்ட 103 பேரின் ரத்த மாதிரிகளையும் சேகரித்து சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.அதன் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் 86 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானது.

இதில் நடிகைகள் ஹேமா மற்றும் ஆஷி ராய் போதைப்பொருள் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டது. வாசுவின் பிறந்தநாளுக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்த அமைப்பாளர் அருண், சித்திக், ரன்பீர், நாகபாபர் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மெர்சிடிஸ் பென்ஸ், ரேஞ்ச் ரோவர், ஆடி போன்ற சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த விருந்தில் பங்கேற்ற 86 பேரில் 59 ஆண்கள், 27 பெண்கள் ஆவர். இவர்கள் அனைவரையும் விசாரணைக்கு ஆஜராகும்படி பெங்களூரு குற்றப்பிரிவு போலீஸார் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளனர். இதன் பின்னர் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விருந்தின் போது ​​பெருமளவிலான எம்டிஎம், கொக்கெய்ன் மற்றும் ஹைட்ரோ கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது போலீஸார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.