ஒரு தலைக்காதலால் விபரீதம்.. இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

230

மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பை உரண் பகுதியில் வசித்து வருபவர் 22 வயது யாஷிரி ஷிண்டே. இவர் பேலாப்பூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 25-ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். இதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் வேலை பார்க்கும் இடத்தில் விசாரித்தனர். அன்றைய தினம் இளம்பெண் முன்கூட்டியே புறப்பட்டு சென்று விட்டதாக தெரிவித்தனர். பல இடங்களில் தேடி பார்த்தும் பலனில்லை. மறுநாள் காலை தங்கள் மகள் காணாமல் போனதாக போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து யாஷிரி ஷிண்டேவை தேடி வந்தனர். ரயில் நிலையம் அருகே முட்புதரில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் அங்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு ஆய்வு நடத்தினர். இதில் வயிறு, முதுகு போன்ற இடங்களில் பல கத்தி குத்து காயங்கள் இருந்ததை கண்டனர். இதனால் அப்பெண் கொலையானது உறுதி செய்யப்பட்டது. உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காணாமல் போனதாக புகார் அளித்த பெற்றோரை மருத்துவமனைக்கு வரவழைத்து அடையாளம் காண செய்தனர். இதில் அப்பெண் யாஷிரி ஷிண்டே என தெரியவந்தது. மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தாவூத் சேக் என்பவர் தனது மகளை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், அவர் கொலை செய்து இருக்கலாம் என இளம்பெண்ணின் தந்தை சுரேந்திர குமார் போலீசாரிடம் தெரிவித்தார்.


இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சாரே கூறுகையில், “சந்தேகத்தின் பேரில் தாவூத் சேக் என்ற நபரை பிடிக்க 7 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. கொலை செய்யப்பட்ட நாளில் யாஷிரி ஷிண்டே அரை நாள் மட்டும் வேலை செய்துள்ளார்.

அன்று பிற்பகல் 3.30 மணி முதல் 4 மணி வரையிலான நேரத்தில் கொலை சம்பவம் நடந்து இருக்கலாம். கொலைக்கு முன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்” என்றார்.