கருத்து வேறுபாட்டால் ஒரே நாளில் முடிந்த திருமண வாழ்க்கை.. பறிபோன இரு உயிர்கள்!!

216

கர்நாடகத்தில் காலையில் திருமணம் நடைபெற்ற நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதல் தம்பதி ஒருவரை ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்து கொண்ட கொடுரம் சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் கோலார் தங்க வயல் தாலுகாவை சேர்ந்தவர் நவீன் (வயது 29).

இவர் அந்த பகுதியில் துணிகடையில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் லிகிதாஸ்ரீ (20), இந்த பெண் பியூசி படித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இதுபற்றி இருவீட்டாருக்கும் தெரிய வந்தது. உடனே அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி நேற்று அவர்களுக்கு இருவீட்டார் முன்னிலையில் ஆண்டர்சன்பேட்டையில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

பின்னர் மாலையில் திருமண நிகழ்ச்சிகள் முடிந்த நிலையில் இருவீட்டாருடன் சந்தோசமாக பேசி உள்ளனர். பின்னர் புதுமண தம்பதி உறங்குவதற்காக வீட்டின் ஒரு அறைக்குள் சென்றுள்ளனர். இதையடுத்து சிறிது நேரத்தில் அறையில் இருந்து லிகிதாயின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

இதனால் பயந்துபோன குடும்பத்தினர் அறைக்கதவை திறந்துள்ளனர். அப்போது நவீன் மற்றும் லிகிதாஸ்ரீ ஆகிய 2 பேரும் ரத்த வெள்ளத்தில் கத்திக்குத்து காயங்களுடன் கிடந்துள்ளதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.


இதனைத்தொடர்ந்து குடும்பத்தினர் பதறியடித்த படி அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரி செல்லும் வழியில் லிகிதாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து நவீன் பெங்களூருவில் உள்ள விக்டோரியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனினும் சிகிச்சை பலனின்றி நவீன் இன்று காலையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கோலார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது புதுமண தம்பதியான நவீன் மற்றும் லிகிதாஸ்ரீ இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதும்,
வீட்டின் அறைக்குள் சென்ற சில நிமிடங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு வாக்குவாதமாக மாறியதும் தொடர்ந்துள்ளது.

அப்போது தம்பதி இருவரும் அங்கிருந்த கத்தியை எடுத்து ஒருவரை ஒருவர் சரமாரியாக குத்திக் கொண்டுள்ளது தெரிந்தது. இதுகுறித்து நவீன் பக்கத்து வீடுகளில் வசித்து வந்த விசாலாட்சி மற்றும் பவித்ரா ஆகியோர் கூறுகையில், நவீன், லிகிதாஸ்ரீ 2 பேரும் பல ஆண்டுகள் காதலித்து வந்தனர்.

அவர்கள் விருப்பப்படி திருமணமும் நடந்து முடிந்தது. ஆனால் காலையில் திருமணம் நடைபெற்ற நிலையில் மாலையில் அவர்களிடையே உண்டான வாக்குவாதம் 2 பேரின் உயிரையும் பறித்துவிட்டது.

வாழவேண்டும் என நினைத்து திருமணம் செய்து வாழ்க்கையை தொடங்குவதற்குள் காதல் தம்பதி உயிரை மாய்த்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறினர். தம்பதியின் தாக்குதலுக்கு முழுமையான காரணம் இதுவரை தெரியவில்லை என போலீசார் கூறுகின்றனர். கருத்து வேறுபாடு காதல் தம்பதியின் கதையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது வேதனை அளிக்கிறது.