தகாத உறவுக்கு இடையூறு.. 5 மாத குழந்தையை கொன்று சாக்கடையில் வீசிய தாய்!!

262

கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுநாகலூரை சேர்ந்தவர் மணிராஜா(24), ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி(21). இவர்களுக்கு ராதிகா(3), 5 மாதமே ஆன லாவண்யா என 2 பெண் குழந்தைகள். கடந்த 4 மாதங்களுக்கு முன் கணவன், மனைவி இடையே குடும்ப தகராறில் ராஜேஸ்வரி குழந்தைகளுடன் வடலூரில் உள்ள தந்தை கொளஞ்சி வீட்டிற்கு வந்துவிட்டார்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் ராஜேஸ்வரி வடலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், வடலூர் கடைவீதி பகுதிக்கு சென்றுவிட்டு 5 மாத குழந்தை லாவண்யாவுடன் வீட்டிற்கு சென்றபோது சந்தைதோப்பு அருகே வந்த எனது கணவர் மணிராஜா மற்றும் 2 பேர் குழந்தையை பிடுங்கி கடத்தி சென்றுவிட்டனர் என கூறியிருந்தார். போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. கணவரை பிரிந்து 2 பெண் குழந்தைகளை வளர்ப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜேஸ்வரிக்கு அப்பகுதியில் உள்ள ஆண் நண்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கைக்குழந்தை இருப்பதால் தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ராஜேஸ்வரி 5 மாத குழந்தை லாவண்யாவை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கழுத்தை நெரித்து கொன்று உடலை சாக்கில் சுற்றி அருகே உள்ள அய்யன் ஏரி சாக்கடை கால்வாயில் போட்டுள்ளார்.

இதனை மறைப்பதற்காகவும், போலீசை திசை திருப்புவதற்காகவும், கணவர் 2 பேருடன் வந்து கடத்தி சென்றதாக புகார் கூறியது தெரியவந்தது. இதையடுத்து 5 மாத குழந்தையின் உடலை சாக்கடை கால்வாயில் இருந்து போலீசார் மீட்டனர். இதையடுத்து ராஜேஸ்வரியை நேற்று கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.