தோழி வீட்டில் தங்கிய இளம்பெண்… இரவு முழுக்க விவாகரத்து யோசனை… விடிந்ததும் கொலையான அதிர்ச்சி!

211

தன்னுடைய தோழிக்கு, விவாகரத்து செய்துக் கொள்ளும்படி யோசனை கூறி, இரவு முழுவதும் அவருடைய வீட்டிலேயே தங்கியிருந்துள்ளார் ஐஸ்வர்யா. விடிந்ததும் பார்த்தால் 25 வயதேயான நவ்யஸ்ரீ கழுத்து நெரித்து கொலைச் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 25 வயதான நவ்யஸ்ரீ என்பவர் கிரண் என்பவரை திருமணம் செய்து கொண்டு எஸ்எம்வி லேஅவுட்டில் உள்ள கெங்கேரியில் வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு இடையே கடந்த சில மாதங்களாகவே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 3 தினங்களுக்கு முன்பு நவ்யஸ்ரீ, தனது தோழி ஐஸ்வர்யாவை போனில் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருந்த போது, தனது திருமண வாழ்க்கை குறித்து வருத்தத்துடன் பேசியுள்ளார்.

இதனால் நவ்யஸ்ரீயை சந்தித்து பேசுவதற்காக ஐஸ்வர்யா மற்றொரு நண்பரான அனில் என்பவருடன் சேர்ந்து நவ்யஸ்ரீ வீட்டிற்கு சென்றுள்ளார். தனக்கு பிரச்சனையாக இருக்கும் திருமண வாழ்க்கை குறித்து விவாதித்துள்ளார். அதில் நவ்யஸ்ரீ அவரது கணவர் மீது போலீசில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து மூவரும் இரவு உணவு அருந்தி விட்டு அனில் நவ்யஸ்ரீ வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றதும், ஐஸ்வர்யா, நவ்யஸ்ரீ வீட்டிலேயே அன்றைய இரவு தங்கியுள்ளார்.

மறுநாள் காலை ஐஸ்வர்யா எழுந்து பார்த்தபோது நவ்யஸ்ரீ கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதை அடுத்து போலீசாருக்கு தகவல் அளித்த ஐஸ்வர்யா நடந்த விவரங்கள் அனைத்தையும் போலீசாரிடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நவ்யஸ்ரீ மீது சந்தேகம் கொண்ட அவரது கணவர் கிரண், இரவு நேரத்தில் தன்னிடம் இருந்த இன்னொரு சாவியை பயன்படுத்தி வீட்டிற்குள் நுழைந்து, தனது மனைவி நவ்யஸ்ரீயின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதனால் அவரை கைது செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.