சொத்து விவகாரம் விஏஓ அலுவலகத்தில் தந்தை, தங்கை வெட்டிக்கொலை.. மகன் வெறிச்செயல்!!

186

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கொட்டுகாரன்பட்டியைச் சேர்ந்தவர் வரதன் (80). விவசாயியான இவரது மனைவி 30 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவரது மகன்கள் லவகிருஷ்ணன் (57), கணேசன் (47), கிருஷ்ணன். மகள்கள் மணவள்ளி(55), மங்கம்மாள்(45).

இதில் கிருஷ்ணன் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். வரதனுக்கு மூன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. இதில் மகன்கள் 15 சென்ட் நிலம் எடுத்து வீடு கட்டி வசித்து வருகின்றனர். மகள் மணவள்ளி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தந்தையின் சொத்தில் பங்கு கேட்டு அவரது நிலத்தில் வீடு கட்டி வந்தார்.

மூத்த மகன் லவகிருஷ்ணன் விவசாயம் மற்றும் துணி வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு இரண்டு மனைவிகள். இருவரும் இறந்துவிட்டனர். இவரது மகள் கல்லாவியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக உள்ளார்.

இந்நிலையில், தந்தையின் சொத்தை தனக்கும் வாரிசாக வழங்க வேண்டும் என கடந்த 2015ம் ஆண்டு ஊத்தங்கரை கோர்ட்டில் மணவள்ளி வழக்கு தொடர்ந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த வரதன், ‘மகன் லவகிருஷ்ணனிடம் சொத்தை பிரிக்கக்கூடாது, வழக்கை நீங்களே நடத்துங்கள்’ என்றார்.

லவகிருஷ்ணனும் வழக்குரைஞர்களுடன் வழக்கு தொடர்ந்துள்ளார். இதையடுத்து மணவள்ளி தொடர்ந்த வழக்கு 6.6.24 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. லவகிருஷ்ணன், ‘வழக்கில் பல லட்சம் செலவு செய்துள்ளதால், சொத்தை பிரித்து தர வேண்டும்’ என, தந்தையிடம் கேட்டார்.

தந்தைக்கும் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த சொத்தை மகளுக்கு தருவதாக வரதன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லவகிருஷ்ணன், அப்படி செய்தால் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்றார்.


இந்நிலையில், நேற்று, வரதன், தன் மகள் மணவள்ளியுடன், தன் சொத்து தொடர்பான சான்றிதழ் பெற, மூணாம்பட்டி விஏஓ அலுவலகத்துக்கு சென்றார். இதையறிந்த லவகிருஷ்ணன் அரிவாளுடன் அங்கு சென்றார்.

அவர்களுக்குள் தகராறும் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த லவகிருஷ்ணன், தந்தை வரதன், தங்கை மணவள்ளி ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில், இருவரும் உடலின் பல்வேறு பகுதிகளில் ரத்தம் வழிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். மாவட்ட எஸ்பி தங்கதுரை, விஏஓ கவியரசி உள்ளிட்ட அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து லவகிருஷ்ணனை கைது செய்தனர்.