18 பேர் ரூ.1 கோடிக்கும் அதிகமாக மோசடி.. தேனியை அலற விட்ட கனகதுர்கா!!

21

தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த சுந்தர் விக்னேஷ் என்பவரின் சகோதரி திவ்யா. தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு திவ்யா பணிபுரிந்து வரும் பள்ளியில் 5ம் வகுப்பு படித்த சிறுவனின் தாயார் கனகதுர்கா (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இதில், பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநராக மதுரையில் பணிபுரிந்து வருவதாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட கனகதுர்கா, அரசுத் துறை உயரதிகாரிகளையும், அரசியல் தலைவர்களையும் தனக்கு நன்கு தெரியும் எனக் கூறியுள்ளார்.

இதையடுத்து பணம் கொடுத்தால் அரசுப் பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கனகதுர்கா தெரிவித்துள்ளார்.

அதனை உண்மை என நம்பிய திவ்யா தனக்கு அரசு ஆசிரியர் பணியும், தன் சகோதரர் விக்னேஷ் சுந்தருக்கு பள்ளிக்கல்வித் துறையில் கணினி ஆப்ரேட்டர் பணியும், அவரது நண்பர் இசாஜ் அகமதுக்கு ஒரு வேலையும் வேண்டும் எனக்கூறி ரூ.18 லட்சம் கொடுத்துள்ளார்.

திவ்யாவிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்ட கனகதுர்கா, திவ்யாவின் பெயரில் ஆசிரியர் பணிக்கான அரசு பணியாணை ஒன்றை பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்டதாக கூறி கொடுத்துள்ளார்.


அரசு பணியாணையை எடுத்துக் கொண்டு ஆசிரியர் வேலைக்குச் செல்ல திவ்யா தயாரான போது, கனகதுர்கா வழங்கிய பணி ஆணை போலியானது எனத் தெரிய வந்துள்ளது.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த திவ்யா, தனது சகோதரர் சுந்தர் விக்னேஷ் மூலமாக கனகதுர்கா மீது தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் புகார் அளித்தார்.

இது குறித்த புகாரின் பேரில் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், கனகதுர்கா பள்ளிக்கல்வித் துறையில் இணை இயக்குநர் இல்லை என்பதும்,

இது போல் இணை இயக்குநராக பணிபுரிந்து வருவதாக கூறி தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 18 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி சுமார் ரூ.1 கோடியே 11 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை மோசடி செய்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து கனகதுர்காவை கைது செய்த குற்றப்பிரிவு போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.