செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்திற்குள்ளானதில், பைக்கில் சென்றுக் கொண்டிருந்த தாயும் மகனும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருவரும் மின் கட்டணம் கட்டி விட்டு தங்களது வீட்டிற்குத் திரும்பிச் சென்றுக் கொண்டிருக்கையில் இந்த கோர விபத்து நேரிட்டுள்ளது.
சிங்கபெருமாள் கோவில் முத்துமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஆண்டனி.
இவரது மனைவி ஜெயஸ்ரீ (32). இவர்களது மகன் ஆலன் (15). அரசு பள்ளி ஒன்றில் ஆலன் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை 11 மணியளவில் சிங்கபெருமாள் கோவில் நூலகம் எதிரே உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு மின் கட்டணம் செலுத்துவதற்காக இருசக்கர வாகனத்தில் ஜெயஸ்ரீயும், அவரது மகன் ஆலனும் சென்றுள்ளனர்.
மின்வாரிய அலுவலகத்தில் கட்டணத்தை செலுத்தி விட்டு மீண்டும் இருவரும் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது ஜி.எஸ்.டி.
சாலையில் ஒரகடம் சந்திப்பின் அருகே சாலையை கடக்க முயன்ற போது திருவண்ணாமலையில் இருந்து அடையாறு நோக்கி வந்துக் கொண்டிருந்த அரசுப் பேருந்து இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது பயங்கர வேகத்தில் மோதியது.
இதில் ஜெயஸ்ரீயும், அவரது மகன் ஆலனும் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்துக் குறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மறைமலை நகர் போக்குவரத்து போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ஈருடையாம்பட்டைச் சேர்ந்த யுவராஜ் (54) என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்த நிலையில், தொடர்ந்து ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசுப் பேருந்து மோதியதில் தாயும் மகனும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.