தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மணிகொண்டா நகராட்சி அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் திவ்யா ஜோதி. இவரது கணவர் ஸ்ரீபாத்.
இருவரும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையில் திவ்ய ஜோதி வேலை செய்யும் இடத்தில் அதிக லஞ்சம் வாங்குவது தெரியவந்துள்ளது. இதனால், பணத்தை எடுத்து தனது வீட்டின் அறைகளில் தனியாக பதுக்கி வைத்திருந்தார்.
இதனை கண்டுபிடித்த கணவன் மனைவியின் நடவடிக்கையை கண்டித்துள்ளார். ஆனால் அவர் திருந்தவில்லை என கூறப்படுகிறது.
இதனால் விரக்தியடைந்த அவர் மனைவியிடமிருந்து விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார். மேலும், மனைவிக்கு தனது செயலுக்கு பாடம் புகட்ட நினைத்த கணவர், மனைவி லஞ்சம் வாங்கிய பண மூட்டைகளை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இதன் மதிப்பு ரூ.30 லட்சம் வரை இருக்கும் என கூறப்படும் நிலையில், ஸ்ரீபாத் வெளியிட்டுள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். தற்போது, இந்த வீடியோ வைரலானதை அடுத்து, லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவரின் செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும் நடிகர் கமல் நடிப்பில் முன்னதாக வெளியான இந்தியன் 2 திரைப்படத்தின் காட்சிகள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.