காதலிக்க மறுத்த 12ம் வகுப்பு மாணவி உயிரோடு எரித்துக் கொலை செய்த காதலன்!!

46

காதலித்து வந்தவன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துக் கொண்ட பின்னரும் தொடர்ந்து காதலிக்க வற்புறுத்தி வந்த நிலையில், காதலிக்க மறுத்த 12ம் வகுப்பு மாணவியை தனிமையில் சந்தித்து பேச வேண்டும் என்று கூறி, பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொலைச் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில், குற்றவாளியைப் போலீசார் கைது செய்துள்ளனர். பொதுமக்கள் என்கவுண்டர் செய்து கொல்ல வேண்டும் என்று கொந்தளித்து வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதி, பத்வேல் அருகே கோபாவரம் மண்டலத்தில் உள்ள வனப்பகுதியில் கடந்த சனிக்கிழமையன்று தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் காதலனால் உயிரோடு தீ வைத்து எரிக்கப்பட்ட 16 வயது பள்ளி மாணவி,

கடப்பாவில் உள்ள ராஜீவ் காந்தி மருத்துவ அறிவியல் கழகத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார். சிறுமியின் கொடூர மரணத்திற்கு காரணமான குற்றவாளி கடப்பா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

கடப்பா எஸ்பி வி ஹர்ஷவர்தன் ராஜு செய்தியாளர்களிடம் கூறுகையில், விக்னேஷ் என அடையாளம் காணப்பட்ட குற்றவாளி, பாதிக்கப்பட்ட தஸ்தாகிரம்மா எனும் 16 வயது பள்ளி மாணவியுடன் சிறுவயதில் இருந்தே நட்பாக இருந்ததாகவும், இருவரும் காதலித்து வந்ததாகவும் கூறினார்.

இருப்பினும், கடப்பாவில் உள்ள உள்ளூர் ஹோட்டலில் சமையல்காரராகப் பணிபுரியும் விக்னேஷ், தஸ்தாக்கிரம்மாவைத் தூக்கி எறிந்துவிட்டு, தற்போது கர்ப்பமாக இருப்பதாகக் கூறப்படும் வேறொரு பெண்ணை மணந்துள்ளார்.


விக்னேஷை திருமணம் செய்து கொள்ளுமாறு தஸ்தாகிரம்மா தொடர்ந்து அழுத்தம் கொடுத்த போது, ​குற்றம் சாட்டப்பட்ட விக்னேஷ், அவளை ஒழிக்க திட்டம் தீட்டியிருக்கிறான்.

விக்னேஷ் தனது திட்டப்படி, தஸ்தகிரம்மாவை கடந்த சனிக்கிழமை தன்னைத் தனிமையில் சந்திக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். இல்லையெனில் தற்கொலைச் செய்துக் கொள்ளப் போவதாக வற்புறுத்தி அழைத்துள்ளார்.

தஸ்தகிரம்மா தனது கல்லூரியில் இருந்து வகுப்புகளைப் புறக்கணித்து விட்டு, ஆட்டோவில் விக்னேஷைச் சந்திக்கச் சென்றுள்ளார். அப்போது தஸ்தகிரம்மாவை நடுவழியில் சந்தித்து, ஒரு தனியார் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குள் தனிமையான இடத்திற்கு விக்னேஷ் அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு விக்னேஷ் தஸ்தாகிரம்மாவை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு இருவரும் திருமணம் குறித்து பேசிய போது, மீண்டும் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டதைத் தொடர்ந்து, விக்னேஷ், தான் கொண்டு வந்த பெட்ரோல் பாக்கெட்டை எடுத்து, தஸ்தாகிரம்மா மீது வீசி, தீ வைத்து விட்டு, அங்கிருந்து தப்பியோடினார்.

தஸ்தாகிரம்மாவின் அலரம் சப்தம் கேட்டு, பக்கத்து வயலில் வேலை செய்யும் பெண்கள், அவரை மீட்டு போலீசார் உதவியுடன் RIMS மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

80% தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்ட தஸ்தாகிரம்மா, கடந்த சனிக்கிழமை மாஜிஸ்திரேட் மற்றும் காவல்துறையிடம் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்து, நடந்த சம்பவங்களை வரிசையை தெளிவாக விவரித்தார்.

80 சதவீதத்திற்கும் மேலான தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்ட தஸ்தாகிரம்மாவை உயிர்ப்பிக்க தங்களால் இயன்றவரை முயற்சித்த போதிலும், அவர் நேற்று அதிகாலை 5 மணியளவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது பலனளிக்காமல் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில், முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் அறிவுறுத்தலின் பேரில் , கடப்பா மாவட்ட போலீஸ் பிரிவால் அமைக்கப்பட்ட நான்கு போலீஸ் குழுக்கள், விக்னேஷை நேற்று முன் தினம் இரவு கைது செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மற்றும் பல்வேறு பெண்கள் அமைப்புகள், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.