கன்னியாகுமரி முழுவதுமே கலங்கடித்த புதுமணப்பெண் தற்கொலை வழக்கில், மருமகளின் தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட மாமியாரும் தற்கொலைக்கு முயன்றதில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில், தனது கணவனுடன் மாமியார் நெருங்க விட மறுக்கிறார் என்று தாயாரிடம் புலம்பிய புதுமணப்பெண் சுருதி கடந்த அக்டோபர் 21ம் தேதி தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்டார்.
தற்கொலைச் செய்துக் கொள்வதற்கு முன்பாக தனது தாயாருக்கு, “ஸாரிம்மா.. என்னை மன்னிச்சுடுங்க.. எனக்கு வாழாவெட்டியாக வீட்டில் வந்து இருக்க விருப்பமில்லை.
அதனால் மட்டும்தான் நான் இப்போ போகிறேன்” என்று ஆடியோவில் உருக்கமாக பேசி, தன் உயிரை மாய்த்துக் கொண்டது பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தெற்குமண் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். மின்சார வாரியத்தில் வேலைப் பார்த்து வரும் இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த சுருதி என்பவருடன் திருமணம் நடந்தது.
இந்நிலையில், கடந்த 21ம் தேதி தனது தாயாருக்கு சுருதி அனுப்பியிருந்த வாட்ஸ் அப் ஆடியோவில், “என்னை என்னுடைய மாமியார் கணவருடன் பேசவே விட மாட்டேங்கறாங்க.
அம்மா வீட்டில் விட்டுவிட வேண்டும் என அடிக்கடி சொல்றாங்க. அப்படி வாழாவெட்டியாக உங்கள் வீட்டில் வந்து உட்கார எனக்கு விருப்பமில்லை.. அதைவிட இங்கு இருப்பது எவ்வளவோ மேல்.
என் கணவருக்கும் எனக்கும் இந்த நாள் வரை எந்த பிரச்சினையும் வந்ததில்லை.. எல்லா பிரச்சனையும் இவங்களால் தான் (மாமியார்) வருது. கணவருடன் நான் வெளியே செல்லக்கூடாதுன்னு சொல்றாங்க. என் கணவர் பக்கத்தில் நான் உட்கார கூடாது.
இப்படியெல்லாம் என்னை கொடுமைப்படுத்தறாங்க.. ஸாரிம்மா” என்று கண்ணீர் விட்டப்படி அந்த ஆடியோவில் பேசி அனுப்பி விட்டு, சுருதி பாபு தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தனது மகளின் தற்கொலைக்கு அவரது மாமியார் தான் காரணம் என்று சுருதியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் அவரது கணவர் கார்த்திக், மாமியார் செண்பகவல்லி மற்றும் சுருதி பாபுவின் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
அதற்குள் சுருதியின் கண்ணீருடன் பேசிய ஆடியோ தமிழகமெங்கும் பரவி, பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதனால் போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து சுருதியின் மாமியார் செண்பகவல்லி கடந்த 23ம் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் மயங்கி விழுந்து கிடந்தார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திக் மற்றும் உறவினர்கள், செண்பகவல்லியை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த செண்பகவல்லி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுமணப்பெண் சுருதி பாபு தற்கொலைச் செய்துக் கொண்ட சோகம் மறைவதற்குள் அவரது இறப்புக்கு முக்கிய காரணமாக குற்றம்சாட்டப்பட்ட மாமியாரும் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தாயாரிடமும், மனைவியிடமும் வெளிப்படையாக பேசி பிரச்சனையை சரியாக கையாளாததால் மனைவியையும், தாயாரையும் இழந்து நிற்கிறார் கார்த்திக் என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் கருத்திட்டு வருகின்றனர்.