‘எங்களைப் பார்க்காம இருக்க மாட்டான்’ மகன் இறந்த துக்கத்தில் கணவன் – மனைவி எடுத்த விபரீத முடிவு!!

190

“அவன் எங்களைப் பார்க்காம இருக்க மாட்டான்…” என்று மகன் இறந்த துக்கத்தில் இருந்து வந்த தம்பதியர் விஷம் குடித்து விடுதி அறையில் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வசித்து வருபவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி வத்சலா. இந்த தம்பதியருக்கு 7 வயதில் சுரேஷ் என்கிற மகன் இருந்த நிலையில்,

கடந்த மார்ச் மாதம் திடீரென்று சுரேஷூக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வைரஸ் காய்ச்சலுக்கு பல மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் சிகிச்சைப் பலனின்றி ஏப்ரல் மாதம் சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தங்களது ஆசை மகன் காய்ச்சலில் உயிரிழந்த சம்பவம் காரணமாக பெற்றோர் மிகவும் மனமுடைந்து போயினர். மன அழுத்தத்தில் இருந்து வந்தவர்களை உறவினர்கள் எத்தனை தேற்றியும் துக்கத்தில் இருந்து மீளவில்லை.

இதனையடுத்து கோவை அருகே குடும்பத்துடன் வசித்து வரும் பழனிசாமியின் அண்ணன் முருகேசன், மகனை இழந்த சோகத்தில் இருக்கும் தனது தம்பி பழனிசாமி மற்றும் வத்சலாவை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வேடப்பட்டிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு சென்றதும் பழனிச்சாமி மாணவர்களுக்கு வீட்டில் டியூசன் எடுத்து வந்தார். வத்சலா தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வத்சலாவும், பழனிச்சாமியும் கடந்த நவம்பர் 3ம் தேதி கோவை காந்திபுரத்தில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.


ஒரு நாள் முழுவதும் இருவரும் லாட்ஜ் அறையை விட்டு வெளியே வரவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் உரிமையாளர், ஊழியர்களுடன் சென்று அறையின் கதவை பலமுறை தட்டினர்.

அப்படியும் கதவு திறக்கப்படாததால் தங்களிடம் இருந்த மாற்று சாவியால் அறையைத் திறந்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. கட்டிலில் வாயில் நுரை தள்ளியபடி இருவரும் சடலமாக கிடந்துள்ளனர். இது குறித்து பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் லாட்ஜ் அறையில் நடத்தப்பட்ட சோதனையில் தம்பதி எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில், “எங்களது மகன் சுரேஷ் இல்லாத வாழ்க்கையை எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. 7 வருடம் நாங்கள் அவனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டோம்.

இப்போது அவன் இல்லாததால், ஒவ்வொரு நிமிடத்தையும் கடக்க ஒவ்வொரு வருடம் போல ஆகிறது. அவனால் எங்களை பார்க்காமல் இருக்க முடியாது. எனவே அவன் இருக்கும் இடத்துக்கே நாங்கள் சென்று விடுகிறோம்” என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.