நடுரோட்டில் துடிதுடிக்க கல்லூரி மாணவர் வெட்டி படுகொலை :பழிக்கு பழியாக நடந்த கொடூர கொலை!!

80

பழிக்கு பழியாக நடுரோட்டில் சட்டக்கல்லூரி மாணவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை நீதிமன்ற வாசலில் விசாரணைக்கு ஆஜராக வந்திருந்தவர் துரத்தி படுகொலைச் செய்யப்பட்ட நிலையில்,

நேற்றைய தினமே அடுத்த பயங்கரமாக நெல்லையில் பழிக்குப்பழியாக சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் நடுரோட்டில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரே நாளில் அடுத்தடுத்து நெல்லையில் நடுரோட்டில் பழிக்குப்பழியாக இருவர் கொலைச் செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி கீழ நடுத்தெருவைச் சேர்ந்தவர் செல்லத்துரை மகன் மணிகண்டன் (22).

இவர் சென்னையில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்று வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் விடுமுறைக்காக ஊருக்கு வந்தார்.


நேற்று காலை வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வயலுக்கு சென்றார். பின்னர் வயலில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டார்.

கமிட்டி நடுநிலைப்பள்ளி அருகில் சென்றுக் கொண்டிருந்த போது, சேரன்மாதேவி லால் பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்த சிவராமன் மகன் மாயாண்டி (46) என்பவர் மணிகண்டனை வழிமறித்து, நடுரோட்டில் கத்தியால் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதில் படுகாயம் அடைந்த மணிகண்டனை, அவரது உறவினர்கள் மீட்டு சேரன்மாதேவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மணிகண்டன் உயிரிழந்தார். இதுகுறித்து சேரன்மாதேவி போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பழிக்குப்பழியாக மணிகண்டன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள கோட்டராங்குளத்தில் சிவராமன் (25) என்ற வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையில் மணிகண்டனின் நெருங்கிய உறவினருக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மணிகண்டனை, கொலை செய்யப்பட்ட சிவராமனின் தாய்மாமா மாயாண்டி கத்தியால் குத்திக் கொன்றது தெரியவந்தது.

இந்த பயங்கர கொலையால் சேரன்மாதேவி பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தப்பி ஓடிய மாயாண்டியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.