காய்ச்சலுக்காக வந்த மாணவனுக்கு ஊசி போட்ட பெண்.. மறுநாளே பலியான சோகம்!!

208

தாம்பரம் அருகே உள்ள சேலையூர் சந்திரன் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் (19), கவுரிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார். கடந்த 22ம் தேதி, சந்தோஷுக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள டாக்டரிடம் அவரது தாய் அழைத்துச் சென்றார்.

அங்குள்ள கிளினிக் மூடப்பட்டதால், அருகில் உள்ள ராகவேந்திரா மெடிக்கல் ஷாப்பில் கேட்டபோது, ​​அங்குள்ள ஜெயந்தி என்ற பெண், சந்தோஷை பரிசோதித்து, காய்ச்சலுக்கு ஊசி போட்டதாக கூறப்படுகிறது.

மறுநாள், 23ம் தேதி, ஊசி போட்ட இடத்தில் வீக்கம் ஏற்பட்டதால், உடனே மருந்து கடைக்கு சென்று கேட்கவே, அந்த பெண் “ஆயின்மெண்ட் தடவுங்கள், சரியாகிவிடும்” என்று கூறியுள்ளார்.

அதன்பின், கை, கால்களில் வீக்கம் ஏற்பட்டதால், குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,

அங்கிருந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்து நேற்று முன்தினம் மாலை இறந்தார்.


அவரது உடலை வீட்டிற்கு கொண்டு வந்த பெற்றோர், ஊசி போட்டதால் மகன் இறந்து விட்டதாக சேலையூர் காவல் நிலையத்தில் நேற்று மதியம் புகார் அளித்தனர்.

இதையடுத்து சேலையூர் போலீசார் சந்தோஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் சந்தோஷின் நண்பர்கள் ராகவேந்திரா மெடிக்கல் ஷாப்பை அடித்து நொறுக்கினர்.

அவர் இறந்ததற்கு மெடிக்கல் ஷாப்பில் போட்ட ஊசிதான் காரணம் என்று கூறி ராகவேந்திரா மெடிக்கல் ஷாப்பை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது, அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு மருந்து கடை மூடப்பட்டது.

இதனிடையே இந்த சம்பவம் குறித்து மெடிக்கல் ஷாப் நடத்தி வரும் ஜெயந்தி (49) என்ற பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர் பி.ஏ. பட்டதாரி மற்றும் 20 வருடங்களாக மெடிக்கல் ஷாப் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெயந்தி தான் ஊசி போடவில்லை என போலீசாரிடம் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.