நன்றாகப் படிக்குமாறு அறிவுரைக் கூறியவரை அரிவாளால் வெட்டிக் கொலைச் செய்ததாக 11ம் வகுப்பு படித்து வந்த மாணவரைப் போலீசார் கைதுச் செய்துள்ள நிலையில், கொலைக் குற்றத்தை மறைத்ததற்காக மாணவரின் தாயாரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம், மதுரையான்காடு பகுதியைச் சோ்ந்தவா் சின்னத்தாயி(88). இவர் வீட்டில் தனியே வசித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி 27ம் தேதி தலை வெட்டப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.
இது குறித்து விசாரணை நடத்தி வந்த ஆட்டையாம்பட்டி போலீசா, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினா்.
இதில், மூதாட்டியின் வீட்டருகே வசித்து வந்த மதுரையைச் சோ்ந்த பாண்டி மனைவி கிருஷ்ணபிரியா (38), அவரது மகன் ஆகிய இருவரும் அவசர அவசரமாக பொருட்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து காரில் வெளியே செல்வது சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தது.
இதனையடுத்து கிருஷ்ணபிரியாவை காவல் நிலையத்திற்கு அழைத்து, அவரிடம் நடத்திய விசாரணையில் மூதாட்டியை தனது மகன் தான் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தாா்.
இது குறித்து போலீசார் கூறுகையில், “கணவா் இறந்த நிலையில் கிருஷ்ணபிரியா, மூதாட்டியின் வீட்டருகே தனது மகனுடன் தங்கி அரியானூரில் ஹோட்டல் நடத்தி வந்துள்ளார்.
சம்பவத்தன்று மூதாட்டி, கிருஷ்ணபிரியாவின் மகனிடம் தந்தை இல்லாததால் நன்றாகப் படித்து தாய்க்கு உதவுமாறு அறிவுரை கூறியுள்ளாா்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவா், மூதாட்டி தூங்கும் போது அரிவாளால் அவரது தலையை வெட்டிவிட்டு அங்கிருந்து தனது வீட்டிற்கு வந்துள்ளாா்.
ஹோட்டல் வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு வந்த கிருஷ்ணபிரியா, மகனின் சட்டையில் இருந்த ரத்தக் கரையைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா். பின்னர் இது குறித்து மகனிடம் தொடர்ந்து விசாரிக்கையில், மூதாட்டியைக் கொலை செய்து விட்டதாக தெரிவித்துள்ளாா்.
இதனையடுத்து அங்கிருந்து இருவரும் காரில் ஏறி புதுவையில் உள்ள அவா்களது உறவினா் வீட்டிற்கு தப்பிச் சென்றுள்ளனர். பின்னா் அவா்கள் விசாரணைக்காக வரவழைக்கப்பட்ட நிலையில் கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது எனப் போலீசா தெரிவித்தனா்.
கொலை செய்த மாணவா், கொலையை மறைத்த குற்றத்திற்காக அவரது தாயார் கிருஷ்ணபிரியா ஆகிய இருவரையும் கைது செய்த ஆட்டையாம்பட்டி போலீசார், இருவரையும் நீதிமன்ற உத்தரவின் பேரில் மாணவரை சிறுவா் சீா்திருத்தப் பள்ளியிலும், கிருஷ்ணபிரியாவை சேலம் பெண்கள் சிறையிலும் அடைத்தனா்.