தென் அமெரிக்காவில் 10,000 கி.மீ. தூரத்தை சைக்கிளில் கடந்து உலக சாதனை படைக்க இந்திய வீரர் மோஹித் கோலி முயற்சி செய்தார். இவருக்கு வயது 36. இவர் பிப்ரவரி 12ம் தேதி சாலை விபத்தில் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 22 ம் தேதி தனது சாதனை முயற்சிக்கான பயணத்தை கொலம்பியா நாட்டின் கார்டாகெனாவில் தொடங்கிய அவர் பெரு, ஈக்வடார் நாடுகளைக் கடந்து தற்போது சிலி நாட்டில் தனது சைக்கிள் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில், சிலியின் டமாருகள் மாகாணத்தின் தலைநகரான போஸோ அல்மோண்ட்டேவில் அந்நாட்டின் மிக நீண்ட சாலையான ரூட் 5 ல் பிப்ரவரி 12ம் தேதி தனது சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, காலை 8.30 மணிக்கு அவ்வழியாக வந்த சிறிய பேருந்து ஒன்று அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, தனது பயணம் முழுவதையும் அவரது சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவு செய்து வந்தார். கொலம்பியாவின் கார்டாகெனாவில் தொடங்கிய அவரது பயணம் ஆர்ஜென்டீனா நாட்டின் உஷூயா நகரத்தில் முடிவு பெறுவதாகயிருந்தது.
2018 ம் ஆண்டு அதிவேகமாக தென் அமெரிக்காவை 41 நாள்கள், 41 நிமிடங்களில் சைக்கிளில் கடந்த ஆஸ்திரியா நாட்டின் மைக்கல் ஸ்ட்ராஸரின் உலக சாதனையை முறியடிக்கும் நோக்கில் மோஹித் இந்த பயணத்தை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.