ஒரு தலை காதலால் விபரீதம் அதிர வைத்த இளைஞரின் குடும்பம்!!

6

கரூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி ஒருதலையாக காதலித்து வந்த நிலையில், மாணவியை மினி வேனில் கடத்திச் சென்ற இளைஞர், அவரது தாய் மற்றும் நண்பர்கள் 5 பேரை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் ஈசநத்தம் அருகேயுள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் நந்தகோபால் (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.

இவரது காதலை மாணவி நிராகரித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாந்தோணிமலை பொன்நகரில் பேருந்தில் இருந்து மாணவி இறங்கி கல்லூரிக்கு நடந்து சென்றுக் கொண்டிருந்த போது, மாணவியை நந்தகோபால், அவரது தாய் கலா, நண்பர்கள் உதவியுடன் திடீரென மினி வேனில் கடத்தி சென்றுள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில், தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். டிஎஸ்பிக்கள் செல்வராஜ், முத்துகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள சிசிடிவி கேமிரா காட்சிகள்,

செல்போன் எண்களை ஆய்வு செய்து, திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே கோடங்கிபட்டியில் நந்தகோபால் பாட்டி பொன்னம்மாள் வீட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட கல்லூரி மாணவியை போலீசார் மீட்டனர்.

போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், நந்தகோபால் கடந்த ஒரு வருடமாக மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததும், மாணவி வீட்டிற்குச் சென்று பெண் கேட்டும் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என்பதால், மாணவியை கடத்திச் சென்றது தெரிய வந்தது.


இதையடுத்து நந்தகோபால், அவர் தாய் கலா(45), நண்பர்கள் கருப்புசாமி(28), பழனிச்சாமி(42), சரவணன்(26) ஆகியோரை போலீசார் கைது செய்து, கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,

கலாவை திருச்சி பெண்கள் தனிச் சிறையிலும், மற்ற 4 பேரும் கரூர் கிளை சிறையிலும் நேற்று அடைக்கப்பட்டனர். மீட்கப்பட்ட மாணவி அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.