திருமணமாகி கணவர்… 30 ஆண்டுகளாக பெண்ணாக வாழ்ந்தவர் ஒரு ஆண்: மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

1068

இந்தியாவில் 30 ஆண்டுகளாக பெண்ணாக வாழ்ந்து வந்த நபர், வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்ற போது, அங்கு மருத்துவர்கள் அவரை சோதித்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர்.

கொல்கத்தாவில், கடந்த 30 ஆண்டுகளாக எந்தவித சிக்கலும் இல்லாமல் வாழ்ந்து வந்த பெண்ணுக்கு திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனதால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது, அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் அவர் பெண் அல்ல ஆண் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மேற்கு வங்கத்தின் பிர்பூம் பகுதியைச் சேர்ந்தவ 30 வயது பெண்ணுக்கு திருமணம் ஆகி ஒன்பது ஆண்டுகள் ஆகிறது.

இவருக்கு சமீபத்தில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால், கொல்கத்தாவில் இருக்கும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் புற்றுநோய் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அப்போது, குறித்த மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் அனுபம் தத்தா மற்றும் சவுமென் தாஸ் ஆகியோர் இவருக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.


இதுதொடர்பாக மருத்துவர் தத்தா செய்தியாளர்களிடம் கூறுகையில், தோற்றத்தின் அடிப்படையில் அவர் பெண்ணாகவே இருக்கிறார். குரல், மார்பகங்கள், பிறப்புறுப்பு ஆகியவை பெண்களுக்கு இருப்பதைப் போலவே இருக்கும். ஆனால், அவருக்கு பிறந்ததில் இருந்தே கர்ப்பப்பை இல்லை. அவருக்கு மாதவிடாயும் ஏற்படுவது இல்லை. வயிற்றுவலி தொடர்பாக அவர் சிகிச்சைக்கு வந்திருந்தார். நாங்கள் அதற்கான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டோம்.

அப்போது, அவரது உடலுக்குள் விந்தணுக்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தோம். உடலில் விந்தணுக்கள் சீராக வளர்ச்சியடைவில்லை. டெஸ்டோஸ்டிரோனும் சுரக்கவில்லை. இதனால், அவரது ஹார்மோன்கள் பெண் தோற்றத்தைக் கொடுத்துள்ளன.

மேலும், அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் புற்றுநோய் இருப்பதும் தெரியவந்துள்ளது. தற்போது, அவருக்கு கீமோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவரது உடல்நிலையும் சீராக உள்ளதாக தெரிவித்தார்.

சிகிச்சைக்கு வந்த நபர் இதனை அறிந்தபோது, அவரது எதிர்வினை குறித்தும் மருத்துவர்களிடம் செய்தியாளர்கள் கேட்டுள்ளனர்.

அதற்குப் பதிலளித்த மருத்துவர்கள், ஒரு பெண்ணாகவே அவர் வளர்ந்துவந்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக ஆண் ஒருவருடன் திருமணம் செய்து வசித்துவந்துள்ளார்.

அவர்களது வாழ்க்கையைத் தொடர்வது தொடர்பான மனநல ஆலோசனைகளை அவருக்கும் அவரது கணவருக்கும் அளித்து வருகிறோம் என்று கூறியுள்ளனர்.

கடந்தகாலத்தில் இவர்கள் பலமுறை கருத்தரிக்க முயன்றபோது தோல்வி அடைந்ததாகவும், நோயாளியின் உறவினர்கள் இரண்டு பேருக்கு இத்தகைய உடல் பிரச்னை இருந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது 22,000 பேரில் ஒருவருக்கு வரக்கூடிய அரியவகை நோய் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவரைத் தொடர்ந்து அவருடைய 28 வயது சகோதரியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரும் ஆண் என்பது தெரியவந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.