அவுஸ்திரேலியாவில் குடியிருப்பு ஒன்றில் சொந்த கழிவுகளுக்கு இடையே, அழுகிய நிலையில் நான்கு வயது சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிஸ்பேன் நகரில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்தே வில்லோ டன் என்ற 4 வயது சிறுமியின் சடலம் எலிகள் தின்ற நிலையில் அழுகிய கோலத்தில் மீட்கப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சிறுமியின் தந்தை மார்க் ஜேம்ஸ் டன்(43), மற்றும் வளர்ப்புத்தாய் ஷானன் லே வைட்(43) ஆகிய இருவர் மீதும் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணையில் சிறுமி வில்லோ உணவேதும் இன்றி இறந்திருக்கலாம் எனவும், அவருக்கு போதிய மருத்துவ உதவியும் தரப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமன்றி, பிரேத பரிசோதனையில் சிறுமி வில்லோ கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளை அனுபவித்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறுமி வில்லோ பிறந்த உடன் தாயார் இறந்ததை அடுத்து, இதுவரை வளர்ப்புத்தாயார் மற்றும் சகோதரியுடனே வாழ்ந்து வந்துள்ளார். கடந்த ஓராண்டாக சிறுமி வில்லோ குடியிருப்புக்கு வெளியே காணப்படுவதில்லை எனவும், அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுமியை பட்டினிக்கு சாகவிட்டதும், உடலை எலி தின்றது என தகவல் வெளியானதும் அப்பகுதி மக்களுக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை இனிவரும் நாட்களில் தொடரும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.