கிருஷ்ணகிரி….
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, வீட்டில் துணி காய வைக்கும் போது மின்சாரம் தாக்கி தாய், மகள், 3 வயது பேத்தி என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டையைச் சேர்ந்த இந்திரா, ஆதி திராவிடர்களுக்கான தொகுப்பு வீட்டில் தனது மகள் மகாலட்சுமி, 3 வயது பேத்தி அவந்திகா ஆகியோருடன் வசித்து வந்தார். நேற்றிரவு, ஊத்தங்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்திருந்த நிலையில், வீட்டுக்கு மின் இணைப்பு வரும் ஒயரில் மின்கசிவு ஏற்பட்டு, துணி காய வைக்கும் கம்பிக்கும் மின்சாரம் பரவியிருந்துள்ளது.
இதனை அறியாத இந்திரா தனது பேத்தி அவந்திகாவை இடுப்பில் வைத்துக் கொண்டு துணிகளை காய வைப்பதற்காக சென்றுள்ளார். ஏற்கனவே, கம்பியில் மின்சாரம் பரவியிருந்த நிலையில், துணியின் ஈரத்திற்கு இந்திராவையும், இடுப்பில் அமர்ந்திருந்த அவந்திகாவையும் மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது.
இவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மகலாட்சுமி, இருவரையும் காப்பாற்ற முயன்ற நிலையில், அவரையும் மின்சாரம் தாக்கியுள்ளது. இதில், குழந்தை உட்பட மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து மின் இணைப்பை துண்டித்து மூவரின் சடலங்களையும் மீட்டனர். சடலங்களை கண்டு உறவினர்கள் கதறி துடித்து அழுதது காண்போரை கண்கலங்கச் செய்தது.
40 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட இந்த தொகுப்பு வீடு, சீரமைப்பின்றி சிதிலமடைந்து இருந்துள்ளது. இந்த நிலையில், நேற்றிரவு பெய்த மழையில் மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் பரவியதாக சொல்லப்படுகின்றது.
வீட்டுக்கு முன் நீட்டி விடப்பட்டிருந்த கான்கிரீட் கம்பியில் இருந்து மற்றொரு முனைக்கு கொடி கம்பி கட்டப்பட்டிருந்த நிலையில், கான்கிரீட் கம்பியில் பரவிய மின்சாரம், கொடி கம்பிக்கும் பரவியிருக்கக் கூடும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.