சேலம்..
சேலத்தில் பெண் குழந்தையின் ராசி சரியில்லை என்று சொன்ன ஜோதிடரின் வாக்கை நம்பி, மனைவியையும் பச்சிளம் குழந்தையையும் மூடநம்பிக்கை மற்றும் உயிர் பயத்தால் வீட்டை விட்டு கணவன் துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அருகில் உள்ள இரும்பாலை பெரியப்புதூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். சொந்தமாக வெள்ளி கொலுசு பட்டறை நடத்தி வருகிறார்.இவரது மனைவி கவுசல்யா. இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் பெண் குழந்தை ஒன்று பிறந்தது.
இதையடுத்து தனது குழந்தைக்கு ஜோதிடம் எழுத இரும்பாலை பகுதியில் உள்ள ஜோதிடரை, வெங்கடேசனும், அவரது பெற்றோரும் சந்தித்துள்ளனர். அப்போது அந்த ஜோதிடர், பெண் குழந்தை பிறந்த நேரம் சரியில்லை, குழந்தை வீட்டில் இருந்தால் குழந்தையின் தந்தைக்கும், பாட்டிக்கும் ஆகாது என்றும் அவர்கள் இறந்து விடுவார்கள் என்றும் கூறி பீதியை கிளப்பி விட்டதாக கூறப்படுகிறது.
இதைக் கேட்டு மிரண்டு போன வெங்கடேசன், வீட்டுக்கு வந்ததும், தனது மனைவி கௌசல்யாவிடம் குழந்தையை எடுத்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விடுமாறு கூறி அடித்து உதைத்து டார்ச்சர் செய்ததாக சொல்லப்படுகிறது.
ஆனால் கௌசல்யா அதனை பொறுத்துக்கொண்டு கணவனுடன் இருந்து வந்துள்ளார். ஆனால் வெங்கடேசன், தனது மனைவி கௌசல்யா மற்றும் பெண் குழந்தையை வீட்டை விட்டு துரத்தியதால், கவுசல்யா அதே பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வெள்ளி பட்டறைக்கு கூலி வேலைக்கு சென்று குழந்தையை கவனிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து விவரித்த கவுசல்யா, குழந்தைக்காக தனது கணவனுடன் தன்னை சேர்த்து வைக்குமாறு இரும்பாலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் புகாரை விசாரிக்க வில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த கவுசல்யா திங்கட்கிழமை தனது பெண் குழந்தையை எடுத்து கொண்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். மாவட்ட ஆட்சியர் , கார் நிறுத்தும் பகுதியில் உள்ள படிக்கட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
அங்கு பரபரப்பு ஏற்பட்டதால், தகவல் அறிந்து விரைந்து வந்த டவுன் போலீசார் கவுசல்யாவை சமாதானப்படுத்த முயன்றனர். ஆவேசமான கவுசல்யா, தான் குழந்தையை வைத்துக்கொண்டு மிகவும் கஷ்டப்படுவதாகவும், வீட்டு வாடகை கட்ட முடியவில்லை, குழந்தைக்கு ஊசி போட பணம் இல்லை, இதனால் தனது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றார்.
அல்லது குழந்தைக்கும், தனக்கும் கணவரிடம் தெரிவித்து பண உதவி செய்து தாருங்கள் என்று ஆதங்கத்தை கொட்டினார். கணவனுக்கு சொந்தமாக நிலபுலன்களும், வெள்ளிப்பட்டறையும் உள்ளது என்றும் கௌசல்யா தெரிவித்தார்.
ஒருவழியாக கவுசல்யாவை சமாதானம் செய்து இரும்பாலை காவல் நிலையத்திற்கு அனுப்பிவைத்தனர். பெண்ணின் புகார் குறித்து இரும்பாலை போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஜோதிடர் கூறியதை நம்பி கட்டிய மனைவியையும், பெண் குழந்தையும் அடித்து துன்புறுத்தி விரட்டிய புகாருக்குள்ளாகி இருக்கும் கணவன் வெங்கடேசனை அழைத்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளதால் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
அதே நேரத்தில் தேன் கூட்டில் கல் எறிந்தது போல நன்றாக இருந்த குடும்பத்திற்குள், ராசி சரியில்லை என்ற கதையை அவிழ்த்துவிட்டு கணவன் மனைவியையும் பச்சிளம் குழந்தையையும் பிரித்த ஜோதிடர் மீதும் காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை மேற்கொண்டால், வருங்கலத்தில் வேறு குடும்பங்களில் இது போன்ற விபரீதங்கள் நிகழ்வது தடுக்கப்படும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.