இலங்கையில் கடந்த ஆண்டு இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டு தாக்குதலை போன்று St Paul’s Cathedral தேவாலயத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக பிரித்தானியாவில் கைதுசெய்யப்பட்ட தற்கொலைதாரி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபியா ஷேக் என்ற தற்கொலைதாரியே இவ்வாறு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இவர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட முதல் பெண் தற்கொலை குண்டுதாரி என அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. இவருக்கு தற்போது 14 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கு லண்டனில் உள்ள ஹேய்ஸைச் சேர்ந்த குறித்த பெண் 2007ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். பின்னர் அவர் IS தீவிரவாத கொள்கையினால் ஈர்க்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
குறித்த பெண் போதைக்கு அடிமையானவர் என கூறப்படுகின்றது. கடந்த ஆண்டு லண்டனில் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், குறித்த பெண்ணின் செயற்பாடுகளில் சந்தேகம் கொண்ட பொலிஸார் அவரை கைது செய்திருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.