அமெரிக்காவுடன் அணுசக்திப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கான உடனடி திட்டமில்லை என்று வட கொரியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை இணை அமைச்சர் சோ சான்-ஹூய் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், வட கொரியாவுக்கு எதிரான கொள்கைகளை அமெரிக்கா தொடா்ந்து கடைப்பிடித்து வருகிறது.
அந்த நாட்டின் நடவடிக்கைகள் அனைத்தும் வட கொரியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில், அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கோ, ஒப்பந்தம் மேற்கொள்வற்கோ எந்த வாய்ப்பும் இல்லை.
அமெரிக்காவுடன் நேரடியாக அமா்ந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கான எந்தத் தேவையும் தற்போது எழுந்துவிடவில்லை. மேலும், அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டமும் எங்களுக்கு இல்லை.
அமெரிக்காவில் உள்நாட்டு அரசியல் பிரச்னை எழும்போது, மக்களின் கவனத்தை திசைத்திருப்புவதற்காகவே வட கொரியாவுடனான பேச்சுவார்த்தையைப் அமெரிக்கா பயன்படுத்திக் கொள்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளை வட கொரியா 2017-ஆம் ஆண்டின் இறுதிவரை தொடா்ந்து நடத்தி வந்தது.
இதற்குப் பதிலடியாக, வட கொரியா மீது ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலும், அமெரிக்காவும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதனால், வட கொரியாவுக்கும், அமெரிக்க-தென் கொரிய கூட்டணிக்கும் இடையே கடும் பதற்றம் நிலவி வந்தது.
இந்த நிலையில், தங்களது அணு ஆயுதங்களைக் கைவிடுவதாக வட கொரிய அதிபா் கிம ஜாங் உன் கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவித்தார். அதற்குப் பதிலாக, தங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தினார். அதனைத் தொடா்ந்து, இரு கொரிய நாடுகளுக்கும் இடையே பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் ஏற்பட்டது.
அதன் தொடா்ச்சியாக, வட கொரிய அதிபா் கிம் ஜாங் உன், தென் கொரிய அதிபா் மூன் ஜே-இன் ஆகியோரிடையிலான வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பு நடைபெற்றது. கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்களற்ற பிரதேசமாக்குவதற்காக இரு தரப்பினரும் உடன்படிக்கை மேற்கொண்டனா்.
எனினும், வியட்நாம் தலைநகா் ஹனோயில் டிரம்ப்புக்கும் கிம் ஜாங்-உன்னுக்கும் இடையே நடைபெற்ற இரண்டாவது சந்திப்பின்போது, இரு தரப்புக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா உடனடியாகத் தளா்த்த வேண்டும் என்று கிம் ஜாங்-உன் வலியுறுத்தினார்.
ஆனால், வட கொரியா தனது அணு ஆயுதங்களை முழுமையாகக் கைவிட்ட பிறகுதான் பொருளாதாரத் தடைகள் விலக்கப்படும் என்று டிரம்ப் பிடிவாதமாகக் கூறினார். இதனால், இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் உரசல் ஏற்பட்டது. இது வட கொரியாவை எரிச்சலடையச் செய்துள்ளது.
மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துமாறு அமெரிக்காவை வட கொரியா நிர்பந்தித்தாலும், இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்து வருகிறது. இதன் காரணமாக, தென் கொரியா மற்றும் அமெரிக்காவுடனான பதற்றத்தை அதிகரிக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் வட கொரியா ஈடுபட்டு வருகிறது.
இந்தச் சூழலில், அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டமில்லை என்று வட கொரியா மீண்டும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.