தங்க மோசடியில் ஈடுபட்ட மகனால் பெற்றோருக்கு நேர்ந்த பயங்கரம்!!

240

சென்னை..

சென்னை அடுத்த கொளத்தூரில் வயதான தம்பதியினர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மகன் தங்க மோசடி கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரிந்ததால் மனமுடைந்து விரக்தியில் தற்கொலை முடிவை எடுத்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொளத்தூர் பாலாஜி நகரைச் சேர்ந்த கோவிந்தராஜ் – பாரதி தம்பதிக்கு தினேஷ் என்ற மகனும், பாக்கியலட்சுமி என்ற மகளும் இருக்கின்றனர்.ஞாயிற்றுக்கிழமை அன்று கோவிந்தராஜும், பாரதியும் விஷம் அருந்திய நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.

வீட்டில் தினேஷும், பாக்கியலட்சுமியும் இல்லாததால் இருவரும் என்ன ஆனார்கள், என்ன நடந்தது என போலீசார் விசாரணையில் இறங்கினர். இதற்கிடையில், இ.சி.ஆரில் விடுதியில் தங்கியிருந்த இருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேரில் சென்று விசாரித்த போது அந்த இருவரும் கொளத்தூரில் மாயமான தினேஷும், பாக்கியலட்சுமியும் என்பது தெரியவந்தது.


விசாரணையில், தமக்கு தங்க மோசடி கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிந்து, விரக்தியடைந்து பெற்றோர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தினேஷ் கூறியிருக்கிறான்.

புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் உறவினர் உட்பட பலரிடம் குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாக கூறி சுமார் ஆறரை கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் பாலாஜி என்பவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் கைதான பாலாஜிக்கும், தினேஷுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

தனக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்களிடம் குறைந்த விலைக்கு தங்கம் வாங்கித் தருவதாக கூறி பணத்தை வாங்கி பாலாஜிக்கு கொடுத்ததாகவும் அவன் தெரிவித்திருக்கிறான்.

பணம் கொடுத்தவர்கள் அனைவரும் அதனை திருப்பிக் கேட்டு தன்னையும், குடும்பத்தினரையும் தொந்தரவு செய்ததால்,

அந்த அவமானம் தாங்காமல் விஷயம் தெரிந்து தனது பெற்றோர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தினேஷ் கூறியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தன்று வீட்டுக்கு வந்த பார்த்த போது, தாய் தந்தை இருவரும் விஷமருந்திய நிலையில் சடலமாக கிடந்ததாகவும், அதனை பார்த்து தானும், தனது சகோதரியும் பயத்தில் வீட்டை விட்டு வெளியேறி, இ.சி.ஆருக்கு சென்று, விஷம் அருந்திக் கொண்டதாகவும் தினேஷ் போலீசாரிடம் கூறியிருக்கிறான்.

இருப்பினும் தாயும், தந்தையும் சடலமாக கிடப்பதை பார்த்து, போலீசாருக்கு கூட தகவல் சொல்லாமல் தினேஷும், பாக்கியலட்சுமியும் வீட்டை விட்டு சென்றது ஏன்? இருவரும் எதற்காக இ.சி.ஆருக்கு சென்றனர்? உள்ளிட்டவை குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.