ஆவடி…
ஆவடியை அடுத்த பட்டாபிராம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் நித்திய லட்சுமி (34). இவருக்கும் கோயம்புத்தூரைச் சேர்ந்த விஜயகுமார் (37) என்பவருக்கும் கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் நடந்தது.
அப்போது திருமணத்திற்காக 15 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. தற்போது இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், கணவர் விஜயகுமார் பணி நிமித்தமாக வெளியூர் செல்வதாக நித்திய லட்சுமியிடம் கூறி சென்ற நிலையில், தொலைபேசி மூலம் அவ்வப்போது வெவ்வேறு எண்களில் நித்திய லட்சுமியுடன் பேசி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நித்திய லட்சுமி தொலைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அப்போது பேசிய பெண், என் பெயர் நாதஸ்ரீ என்றும் விஜயகுமார் என்பவருடன் கடந்த அக்டோபர் மாதம் 24-ம் தேதி திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் தற்போது தன்னை ஏமாற்றிவிட்டு மற்றொரு பெண்ணுடன் சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பான திருமண பத்திரிகை மற்றும் புகைப்படம் ஆகியவற்றை நித்திய லட்சுமிக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த நித்திய லட்சுமி, விஜயகுமார் குறித்து தீவிரமாக நாத ஸ்ரீயிடம் விசாரித்துள்ளார்.
அப்போது விஜயகுமார் திருமணமானதை மறைத்து மேட்ரிமோனியில் மணமகள் தேவை என பதிவு செய்து 10க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியது தெரியவந்தது.
இந்நிலையில், மீண்டும் மேட்ரிமோனியில் மணமகள் தேவை என பெண்களை குறிவைத்து பணம், நகைக்காக விஜயகுமார் அவரது தங்கை ரேவதி, அப்பா சக்திவேல், அம்மா அம்சவேணி ஆகியோர் கூட்டாக சேர்ந்து திட்டமிட்டு திருமணம் என்ற பெயரில் மோசடி செய்து ஏமாற்றுவதாக நித்திய லட்சுமி கூறுகிறார்.
இதுகுறித்து ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நித்ய லட்சுமி புகார் அளித்தார். ஆனால் காவல் துறையினர் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுபோன்று பல பெண்களை திருமணம் என்ற பெயரில் ஏமாற்ற முயற்சிக்கும் விஜயகுமார் குடும்பத்தினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் திருமணத்திற்காக கொடுத்த 15 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை மீட்டுத்தர வேண்டும் என நித்திய லட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.