திருமணங்களுக்கு அதிரடி தடை விதித்த நாடு! அதிபர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

450

கொரோனா அதிகமாக பரவுவதைத் தொடர்ந்து, திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு ஈரானில் அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 2,397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இங்கு 2,55,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,635 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ஈரானில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் புதிய அறிவிப்பை ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி வெளியிட்டார்.

அதில், நாடு முழுவதும் நடக்க இருக்கும் பெரிய நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கிறோம். அது திருவிழாவாக இருந்தாலும் சரி, திருமணமாக இருந்தாலும் சரி, பயிலரங்கமாக இருந்தாலும் சரி. கொண்டாட்டத்திற்கு இது நேரம் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக, முகக்கவசம் அணியாத ஈரானியர்களுக்கு அரசின் சேவைகள் மறுக்கப்படும் என்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றாத நிறுவனங்கள் ஒரு வாரம் மூடப்படும் என்றும் அதிபர் ஹசன் ரவ்ஹானி முன்னரே தெரிவித்திருந்தார்.

ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

தற்போதைய நிலையில் ஈரான் தலைநகரில் மட்டும் 20 சதவீதம் பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று ஈரான் கொரோனா தடுப்புப் பணிக்குழுவின் தலைவர் அலிரேஸா சாலி தெரிவித்திருந்தார்.

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 90 லட்சம் பேர் வசிக்கின்றனர். ஊரடங்குத் தளர்த்தப்பட்டதால் மக்கள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் ஊரடங்குக் கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டுவரப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.