ஈரோடு….
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே துறையம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவர் கூலி வேலை செய்து வருகிறார். வெளியூர்களுக்குச் சென்று கரும்பு வெட்டும் பணிகளையும் மூர்த்தி மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் சில மாதங்களுக்கு முன்னர் வேலைக்காக வீட்டைவிட்டு சென்றிருக்கிறார் மூர்த்தி.
அதன் பிறகு அவரிடமிருந்து தகவல்கள் ஏதும் வராத நிலையில், மாதங்கள் கடந்த பிறகும் மூர்த்தி வீடு திரும்பாதது மூர்த்தியின் மகன்களான கார்த்தி மற்றும் பிரபு ஆகியோரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது. இதனை அடுத்து பல இடங்களில் இருவரும் தேடியும் தங்களது தந்தையை அவர்களால் கண்டுபிடிக்க இயலவில்லை.
இந்நிலையில் கடந்த 31 ஆம் தேதி சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக கார்த்திக்கு தகவல் கிடைத்திருக்கிறது. சந்தேகத்தின் அடிப்படையில் பேருந்து நிலையத்திற்குச் சென்ற கார்த்தி அது தனது தந்தை தானா என கண்டுபிடிக்க முயன்றிருக்கிறார்.
ஆனால் பேருந்து நிலையத்தில் கிடந்த அந்த சடலத்தின் முகம் மோசமாக சிதைவடைந்து இருந்ததால் கார்த்தி சடலத்தின் உடலை வைத்து அது தனது தந்தை தான் என்ற முடிவிற்கு வந்திருக்கிறார். பின்னர் காவல்துறையினரிடம் நடந்ததை விவரித்து அந்த சடலத்தை எடுத்து வந்து சொந்த ஊரில் அடக்கம் செய்து இருக்கிறார் கார்த்தி.
இந்நிலையில் நேற்று இரவு கார்த்தி வீட்டில் இருந்தபோது வெளியே சத்தம் கேட்டிருக்கிறது. அப்போது வெளியே வந்து பார்த்த கார்த்தி அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்.
கர்நாடகாவிற்கு வேலைக்காகச் சென்ற மூர்த்தி வீடு திரும்பியதும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் பார்த்து உள்ளார். இதனை அடுத்து அவரது குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சியில் இருந்துள்ளனர். விஷயம் அறிந்து துறையம் பாளையம் மக்கள் மூர்த்தியை வந்து பார்த்து செல்கின்றனர்.
இறந்து போனதாக கருதப்பட்ட மூர்த்தி, உயிருடன் திரும்பி வந்ததால், பேருந்து நிலையத்தில் கிடந்த சடலம் குறித்து காவல்துறையினர் மீண்டும் விசாரணையில் இறங்கியுள்ளனர். இறந்து போனதாக கருதி அடக்கம் செய்யப்பட்ட நபர் உயிருடன் வந்த சம்பவம் கோபிசெட்டிபாளையம் பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.