டெல்லி பொலிசாருக்கு அயர்லாந்தில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு: பின்னர் நடந்த அதிரடி திருப்பம்!!

358

அயர்லாந்தில் இருந்து டெல்லி பொலிசாருக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்புக்கு மும்பை நகரில் வசிக்கும் ஒருவரது உயிரின் விலை இருந்துள்ளது.

தற்கொலைக்கு முயன்ற ஒரு இளைஞரின் உயிரை கடல்கள் கடந்து பல மைல்களுக்கு அப்பால் இருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பு மீட்டுள்ளது.

சனிக்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி சுமார் 7.51 மணிக்கு டெல்லி சைபர் செல் பிரிவு தலைமை பொலிஸ் அதிகாரி அனிஷ் ராய் என்பவருக்கு அயர்லாந்தில் செயல்பட்டுவரும் பேஸ்புக் தலைமையகத்தின் அதிகாரியிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

டெல்லியை சேர்ந்த ஒரு அலைபேசி இலக்கத்திற்கு உரிமையாளர் தற்கொலைக்கு முயல்கிறார் என்பதே அந்த தொலைபேசி தகவல். மட்டுமின்றி, பேஸ்புக் கணக்கு மற்றும் மொபைல் இலக்கம் உள்ளிட்ட தகவல்களையும் அயர்லாந்து அதிகாரி மின் அஞ்சல் மூலம் டெல்லி பொலிசாருக்கு அனுப்பி வைத்துள்ளார்.


ஒரு பெண்ணின் பெயரில் அந்த பேஸ்புக் கணக்கு இருந்துள்ளது. மட்டுமின்றி அலைபேசி முகவரியில் அவர் கிழக்கு டெல்லியின் ஒரு பகுதியில் குடியிருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து கிழக்கு டெல்லி பொலிஸ் அதிகாரியை தொடர்புகொண்ட அனிஷ் ராய் துரிதமாக செயல்பட கோரியுள்ளார். தகவலையடுத்து உரிய முகவரிக்கு விரைந்த கிழக்கு டெல்லி பொலிசார், குழப்பமடைந்தனர்.

பொலிசாரை வரவேற்ற அந்த பெண்மணி, அந்த அலைபேசி இலக்கம் தற்போது தான் பயன்படுத்துவதாகவும், ஆனால் பேஸ்புக் கணக்கு தமது கணவர் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி கணவர் தற்போது மும்பை சென்றுள்ளதாகவும், தம்மிடம் சண்டையிட்டு சென்றதாகவும் அவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் கணவர் மும்பை நகரில் எங்கே தங்குகிறார் என்பது தமக்கு தெரியவில்லை எனவும், அவரது அலைபேசி இலக்கத்தை மட்டும் பொலிசாருக்கு அளித்துள்ளார்.

இந்த தகவலை கிழக்கு டெல்லி பொலிசார் அனிஷ் ராய்க்கு தெரியப்படுத்தினர். மட்டுமின்றி இளைஞரை தொடர்புகொள்ள முயன்றும் ஏமாற்றமே மிஞ்சியது.

ராய் உடனே அந்த தகவல்களை மும்பை பொலிசாருக்கு தெரியப்படுத்தினார். மட்டுமின்றி உளவியல் மருத்துவர் ஒருவருக்கும் தகவல் தெரியப்படுத்தினார். இதனிடையே மும்பை பொலிசார் அந்த இளைஞரை கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொண்டனர். ஒருகட்டத்தில் அலைபேசியில் அந்த இளைஞரை தொடர்புகொள்ள முடிந்துள்ளது.

உடனே உளவியல் மருத்துவர் அந்த இளைஞருடன் பேச வைக்கப்பட்டார். மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயற்சி செய்தாகவும், பேஸ்புக் கணக்கில் அதை தெரியப்படுத்தியதாகவும் அவர் மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். இதனிடையே மும்பை பொலிசார் அந்த இளைஞரின் குடியிருப்பு பகுதியை கண்டுபிடித்து அவரை மீட்டுள்ளனர்.