பிஞ்சு மகளின் புகைப்படங்கள் ஆபாச இணையதளத்தில்… அதிர்ச்சியில் பிரித்தானிய தாயார்: பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!!

361

பிரித்தானியாவில் தாயார் ஒருவர் தமது பிஞ்சு குழந்தையின் திருத்தப்பட்ட புகைப்படங்களை சிறார் துஷ்பிரயோக இணையதளத்தில் வெளியாகியுள்ளது அறிந்து அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.

லிவர்பூல், மெர்செசைடைச் சேர்ந்த 29 வயது தாயார் அமண்டா மார்கன் என்பவரே தமது பிஞ்சு மகளின் புகைப்படங்களை ஆபாச இணையதளத்தில் கண்டு அதிர்ச்சியடைந்தவர். அமண்டாவின் மகள் காலியா 6 மாத குழந்தையாக இருக்கும்போது இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றை துவங்கி, அதில் குழந்தை காலியாவின் புகைப்படங்களை பதிவேற்றி வந்துள்ளார் அமண்டா.

பலர் குழந்தை காலியாவின் புகைப்படங்களுக்கு கருத்து தெரிவிப்பதும் அதை பகிர்ந்து கொள்வதும் துவக்கத்தில் அமண்டா சாதாரண நிகழ்வு என்றே கருதியுள்ளார். ஆனால் ரஷ்யாவில் இருந்து இயங்கும் ஒரு இணையதளத்தில் தமது குழந்தையின் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளது அமண்டாவின் பார்வையில் பட்டுள்ளது.

குறித்த இணையதளத்தில் பகிரப்பட்டுள்ள புகைப்படங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் ஆபாசமாகவும் இழிவாகவும் இருந்துள்ளது. மட்டுமின்றி தமது மகளின் ஒரு புகைப்படம் மிகவும் திருத்தப்பட்டு, ஆபாசமாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


அந்த புகைப்படத்திற்கு பதிவாகியிருந்த கருத்துகள் அனைத்தும் மிகவும் இழிவானதாகவும் இருந்துள்ளது. இதைக் கண்ட பின்னர் அமண்டாவால் அழுகையை கட்டுப்படுத்தவே முடியவில்லை என்கிறார்.

சுமார் 45 நிமிடங்கள் அழுது தீர்த்தேன் என கூறும் அமண்டா, என்னால் சரிவர தூங்கவே முடியவில்லை, இது மொத்தமும் எனது தவறே, நானே தான் எனது மகளுக்கு இந்த இழி நிலையை ஏற்படுத்தினேன் என்றார். தமது குழந்தையின் மொத்தம் நான்கு புகைப்படங்கள் அந்த இணையதளத்தில் தாம் பார்த்ததாகவும், அதற்கு மேலும் தம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நம்மை அறியாமல் பலர் அந்த புகைப்படங்களை இழிவாக பயன்படுத்த வாய்ப்புகள் தற்போது அதிகம் என எச்சரித்துள்ளார் அமண்டா. மட்டுமின்றி, இன்னும் சில பெற்றோர்களுடன் இணைந்து அந்த ரஷ்ய இணையதளத்தை முடக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார் அமண்டா.

இருப்பினும் இதுவரை அது முடியவில்லை என கூறும் அவர், தமது மகளின் புகைப்படம் இன்னும் அந்த பக்கத்தில் பதிவாகி உள்ளது என்கிறார் அமண்டா.