பிரித்தானியாவில் கார் மோதி 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அவர் குடும்பத்தாரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. Bury நகரில் தான் இந்த சம்பவம் கடந்த 10ஆம் திகதி நடந்துள்ளது.
மாலை 4.30 மணியளவில் Ruby Cropper என்ற 11 வயது சிறுமி அங்குள்ள சாலையை கடக்க முயன்ற போது அவர் மீது கார் வேகமாக மோதியது.
இதில் படுகாயமடைந்த Ruby Cropper ராயல் மான்செஸ்டர் குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் அவர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக கார் ஓட்டுனரை பொலிசார் கைது செய்த நிலையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். சிறுமி Ruby Cropperன் மரணம் அவரின் தாய், தந்தை மற்றும் மாற்றாந்தந்தையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குடும்பத்தார் கூறுகையில், Rubyன் இழப்பை எங்களால் தாங்கிகொள்ள முடியவில்லை. இந்த இளம் வயதிலேயே மற்றவர்களுக்கு உதவும் குணத்தை Ruby கொண்டிருந்தாள்.
தற்போது தனது உடல் உறுப்புகளை தானம் தருவதன் மூலம் உதவும் கொள்கையை அவள் தொடர்கிறாள் என கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலும் பல தகவல்களை எதிர்பார்க்கின்றனர்.
இது தொடர்பான தகவலோ அல்லது வீடியோ காட்சிகளோ யாரிடமாவது இருந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம் என பொலிசார் கூறியுள்ளனர்.