அமெரிக்கா..
எம்.பி.ஏ., பட்டதாரியான இளம் பெண் தொழிலதிபர் தான்யா பதிஜா (32) அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் லாங் லாங் ஐலேண்ட் பகுதியில் வசித்து வந்தார்.
இந்திய வம்சாவளியினரான தான்யா, சமீபத்தில் ‘டன்கின் டோனட்’ என்கிற பெயரில் விற்பனை நிலையத்தை அந்த பகுதியில் திறந்துள்ளார். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இவரது தந்தை கோபிந்த் பதிஜா அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து அங்கு வசித்து வருகிறார்.
தான்யாவின் பெற்றோர்கள் தனியே வசித்து வருகிறார்கள். தான்யா பதிஜாவின் வீடும் அவர்களது வீட்டின் அருகிலேயே சற்று தள்ளி அமைந்திருந்தது. எப்போதும் தனது செல்லப்பிராணியான நாயுடனே தான்யா காணப்படுவார்.
இந்நிலையில் கடந்த வாரம் இரவு தான்யா பதிஜா வீட்டில் உறங்கியுள்ளார். உடன் அவர் வளர்த்த செல்லப்பிராணி நாயும் இருந்துள்ளது. அதிகாலை 3 மணியளவில் தான்யாவின் வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
தான்யா பதிஜா நன்றாக உறங்கிக் கொண்டிருந்ததால் தீப்பற்றியது குறித்து அவருக்கு தெரியவில்லை. தீ மளமளவென வீடு முழுவதும் பரவியது. இதில், உறங்கிக் கொண்டிருந்த தான்யா பதிஜாவும், அவரது செல்லப்பிராணி நாயும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதிகாலை தான்யா பதிஜாவின் தந்தை நடை பயிற்சி செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்த போது தான், தனது மகள் வீட்டில் இருந்து புகை வருவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் தீயை அணைத்து உள்ளனர்.
ஆனால், தீயில் சிக்கிய தான்யா பதிஜா உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது உடலை மீட்புக்குழுவினர் மீட்டனர். இந்த சம்பவம் குறித்தும், தீ விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.