FREE FIRE விளையாட்டால் பரிதாபமாக பறிபோன மாணவனின் உயிர்!!

152

புதுச்சேரியில்..

புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட மீனவ கிராமமான வீராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்தவர் பச்சைவள்ளி. இவர் புதுச்சேரி பேருந்து நிலையம் எதிரே உள்ள ஜவுளிக்கடை கேண்டினில் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் அருள்தாஸ்; கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மீன்பிடி படகில் அடிபட்டு உயிரிழந்துவிட்டார்.

பச்சைவள்ளி – அருள்தாஸ் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் கமலேஷ், புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த சூழலில் கமலேஷ் நேற்று மதியம் தனது தாயின் புடவையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்த அவரது தம்பி ரிஸ்வான் அதிர்ச்சியில் கூச்சலிட பச்சைவள்ளியின் தாய் மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்தனர்.


தொடர்ந்து தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த கமலேஷை அனைவரும் மீட்டு சோதனை செய்தபோது, அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இது தொடர்பாக அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் அளித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கமலேஷின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது கமலேஷ் வீட்டில் இருக்கும் நேரங்களில் ப்ரீ பையர் எனும் ஆன்லைன் விளையாட்டை செல்போஃனில் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி நேற்றும் காலை நேரத்தில் கேம் விளையாட செல்போனை ரீசார்ஜ் செய்வதற்காக தனது தாய் பச்சைவள்ளியிடம் பணம் கேட்டபோது அவர் வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பும்போது ரீசார்ஜ் செய்து தருவதாக கூறியுள்ளார்.

விடுமுறை நாளான இன்று வீட்டிலிருந்த அவர் காலை முதலே கேம் விலையாட முடியவில்லை என அக்கம்பக்கத்தில் உள்ள அவரது நண்பர்களிடம் வேதனை தெரிவித்திருந்த நிலையில், மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசார் முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.

இதனையடுத்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போனில் ஆன்லைன் கேம் விளையாட ரீசார்ஜ் செய்ய தாய் பணம் தர மறுத்ததால் விரக்தியடைந்த பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.