PUBG விளையாட முடியலையே!.. கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

643

மேற்கு வங்கத்தில் பப்ஜி விளையாட முடியாத காரணத்தினால் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

இளசுகள் மத்தியில் பிரபலமடையும் வீடியோ கேம்கள் அவ்வப்போது விபரீதத்தை ஏற்படுத்திவருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்த ப்ளூவேல் விளையாட்டை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.

இதேபோன்று இளைஞர்களை ஈர்த்த கேம் தான் பப்ஜி, லட்சக்கணக்கானவர்களின் பொழுதுபோக்காக இருந்த இந்த விளையாட்டுக்கு தற்போது இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பப்ஜி விளையாட்டில் மூழ்கிப்போன இளைஞர்கள் பலர் அந்த விளையாட்டை விளையாட முடியாமல், மன உளைச்சலில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.


இந்நிலையில், மேற்கு வங்கத்தில் பப்ஜி விளையாட முடியாத காரணத்தினால் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் புர்பா லால்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரிதம் ஹால்டர். இவர் ஐடிஐ-யில் படித்து வந்துள்ளார். பப்ஜி கேம் வந்த நாளில் இருந்து தொடர்சியாக இரவு நேரங்களில் பப்ஜி கேம் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் பிரிதம்.

இந்த நிலையில் செப்டம்பர் 2ம் தேதி பப்ஜி தடைவிதிக்கப்பட்ட நாளில் இருந்து மிகுந்த விரக்தியாக இருந்த பிரிதம், நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீண்ட நேரமாகியும் அறையில் இருந்து மகன் வெளியே வராததால் கதவை உடைத்துக்கொண்டுப் பார்த்தப்போது தூக்கில் தொங்கிய நிலையில் பிரிதம் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர், போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு விசாரணை நடத்தியத்தில், பப்ஜிவிளையாட முடியாத விரக்தியில்தான் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது.