அரசு பள்ளி கழிவறையில் மாணவன் அடித்துக்கொலை : உறவினர்கள் போராட்டம்!!

11

ராசிபுரம் அரசு பள்ளியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 9ம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் முருகன் நேரில் விசாரணை நடத்தினார். மேலும், உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் எல்ஐசி காலனி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ், பெயிண்டர். இவரது இளையமகன் கவின்ராஜ், சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றான். பின்னர், கழிவறையில் மயங்கிய நிலையில் கிடந்தான். அவனை ஆசிரியர்கள் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு, மாணவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீஸ் விசாரணையில், உயிரிழந்த கவின்ராஜிற்கும் சக மாணவன் ஒருவருக்கும் மோதல் போக்கு இருந்து வந்தது தெரிய வந்தது. கடந்த 21ம் தேதி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.


அன்று அடிவாங்கிய மாணவன் பயத்தில் கடந்த 24,25ம் தேதிகளில் பள்ளிக்கு வரவில்லை. நேற்று முன்தினம் (26ம் தேதி) அவன் பள்ளி வந்ததும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதில் கவின்ராஜ் இறந்துள்ளான். இதுதொடர்பாக அந்த மாணவனை பிடித்து காப்பகத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையடுத்து, நேற்று பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் முருகன், மாவட்ட கல்வி அலுவலர் கற்பகம் உள்ளிட்டோர் பள்ளியில் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

உடன் படித்த மாணவர்கள், வகுப்பு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி சென்றனர். அப்போது, அங்கு வந்த கவின்ராஜின் உறவினர்கள் ₹10 லட்சம் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை,

உரிய முறையில் கண்காணிக்க தவறிய ஆசிரியர்கள், சம்பந்தப்பட்ட மாணவனை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தினர். அவர்களை போலீசார் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கவின்ராஜின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரையிலும் சடலத்தை பெற்றுக் கொள்ள மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்து விட்டனர்.

பள்ளியில் மாணவர்கள் மோதல் போக்கை கடைபிடித்து வந்த நிலையில், ஆசிரியர்கள் முறையாக கண்காணிக்கத் தவறியதால் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு மாணவன் உயிரிழந்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஆசிரியர்களின் அலட்சியப் போக்கே மாணவன் சாவுக்கு காரணம் என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், ராசிபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.