ஆட்டை காப்பாற்றிவிட்டு தன்னுயிரை பறிகொடுத்த உரிமையாளர்!!

374

விவசாய கிணற்றில், மேய்ச்சலின் போது தவறி விழுந்த ஆட்டைக் காப்பாற்றி விட்டு, அதன் உரிமையாளர் தன்னுயிரை இழந்த சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியை அடுத்த பணக்கார வட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. எலக்ட்ரீஷியனாக வேலைப் பார்த்து வந்த பாலாஜி, தனது வீட்டில் சுமார் 20 ஆடுகளை வளர்த்து வந்தார்.

தினமும் காலையில் சிறிது நேரம் பாலாஜி ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில், அதே பகுதியில் காலை வழக்கம் போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றபோது, விவசாய கிணற்றில் ஒரு ஆடு மட்டும் தவறி விழுந்துள்ளது.

இது தெரியாமல் பாலாஜி கொஞ்சம் தூரம் சென்றுவிட்டார். பிறகு சில நிமிடங்களுக்குப் பிறகு ஆட்டை எண்ணினார். ஆடு காணாமல் போனதை கண்டு, கிணற்றுக்கு வந்து பார்த்தார். அப்போது ஆடு தண்ணீரில் தத்தளித்தது. இதையடுத்து, ஆட்டை மீட்க நினைத்த பாலாஜி, உடனடியாக கயிறு கட்டி கிணற்றில் இறங்க முயன்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு அறுந்து கிணற்றில் இருந்த கல் மீது பாலாஜி விழுந்தார். இதில் அவரது தலை கல்லில் அடிபட்டு பலத்த காயம் அடைந்து இறந்தார்.


இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக நாட்றம்பள்ளி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பாலாஜியின் உடலை மீட்டு நாட்றம்பள்ளி போலீசில் ஒப்படைத்தனர்.

நாட்றம்பள்ளி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் விழுந்த ஆட்டின் உயிரைக் காப்பாற்றச் சென்ற உரிமையாளர் அதே கிணற்றில் விழுந்து உயிரிழந்தார்.