ஆட்டோ டிரைவருடன் காதல்.. திடீரென மாயமான நர்சிங் மாணவி.. காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்!!

61

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள வெர்கிளம்பி முண்டவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் ஆட்டோ டிரைவர். இவரது மகள் ஸ்ரீவித்யா (வயது 19).

ஸ்ரீவித்யா குலசேகரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் நர்சிங் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இதற்காக கல்லூரியில் படிக்கும் ஸ்ரீவித்யா வாரந்தோறும் விடுமுறையில் வீட்டுக்கு வருவது வழக்கம்.

பேச்சிப்பாறை அருகே மணியன்குழி பகுதியை சேர்ந்த கபீர் மகன் சபீர் (27). அவர் ஒரு கூலித்தொழிலாளி.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக ஸ்ரீவித்யா படிக்கும் மருத்துவ கல்லூரிக்கு சபீர் சென்றார்.

அங்கு 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் காதலாக மலர்ந்தது. அன்றிலிருந்து இருவரும் செல்போன் மூலம் பேசி காதலை வளர்த்து வந்தனர்.


கடந்த வாரம், கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்வதாக கூறிய ஸ்ரீவித்யா, வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், அக்கம் பக்கத்தில் தேடியும், மகள் கிடைக்கவில்லை.

இதையடுத்து, தனது மகளைக் காணவில்லை என கிருஷ்ணகுமார் குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீவித்யாவை தேடி வந்தனர்.

இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய சபீர், ஸ்ரீவித்யா இருவரும் திருமணம் செய்து கொண்டு, போலீசார் தேடி வருவதை அறிந்து இருவரும் குலசேகரம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவித்யாவின் குடும்பத்தினரும் அங்கு வந்தனர். அப்போது ஸ்ரீவித்யா, சபீரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், அவருடன் தான் வாழ போவதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர் போலீசார் தம்பதியை சேர்த்து வைத்து அனுப்பி வைத்தனர்.