இந்தியாவில் முக்கிய 2 மாநிலங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஊடுருவல்… தாக்குதலுக்கு திட்டம்: ஐநா அறிக்கையில் தகவல்!!

818

ஐநாவின் ஐஎஸ் மற்றும் அல் கொய்தா தீவிரவாதம் பற்றிய அறிக்கையில், இந்திய மாநிலங்களில் பரவியுள்ளதாக அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளது.

அல் கொய்தா அமைப்பைச் சேர்ந்த 150 முதல் 200 வரையிலான உறுப்பினர்கள் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் மியான்மர் நாடுகளில் ஊடுருவி உள்ளதாகவும்,

இவர்கள் குறிப்பிட்ட பகுதிகளில் பெரும் பயங்கரவாதத் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐஎஸ், அல்கொய்தா மற்றும் அந்த தீவிரவாதக் குழுக்களுடன் தொடர்புடைய தனிநபர்கள் பற்றிய ஐநாவின் 26வது அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


இந்திய துணை கண்டத்தில் அல் கொய்தாவின் செயற்பாடுகள் அனைத்தும் ஆப்கானிஸ்தானின் நிம்ரூஸ், ஹெல்மந்த், கந்தஹார் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டுவரும் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் எனவும் தகவல்கள் கூறுகின்றன.

பல்வேறு ஆசிய நாடுகளை சேர்ந்த 150 முதல் 200 வரையான தீவிரவாதிகள் இந்த குழுவில் செயல்பட்டு வருகின்றனர்.

ஒசாமா மஹ்மூத் என்பவரே இந்த குழுவின் தலைவன். குழுவின் முன்னாள் தலைவரின் மரணத்திற்கு பழி வாங்கவே தாக்குதல் திட்டங்கள் வகுக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

ஐஎஸ் அமைப்பின் இந்திய கிளையான விலாயா ஹிந்த் என்ற குழுவில் தற்போது 180 முதல் 200 பேர் உறுப்பினர்களாக உள்ளனர் எனவும் ஐ.நா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர்களும் செயல்பட்டு வருகின்றனர்.

இந்தியாவில் தங்களது கிளை ஒன்றை நிறுவியதாக கடந்த மே மாதம் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.