கேரள…
கேரளத்தில், தன்னுடைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, புகைப்படத்திற்கு கீழ் ரிப் பதிவிட்டு, இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு தகுந்த வேலைக் கிடைக்காத விரக்தியில் இருந்து வந்த இளைஞர் இந்த முடிவை எடுத்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம், ஆலுவாவைச் சேர்ந்தவர் அஜ்மல் ஷெரிப் (28). இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கார், பைக் புகைப்படங்களை பதிவிட்டு பிரபலமடைந்தார். மேலும், தான் மேற்கொள்ளும் பயணங்கள் தொடர்பான புகைப்படங்களையும் அவ்வப்போது தொடர்ந்து இன்ஸ்டாவில் பதிவிட்டு வந்தார். இன்ஸ்டாகிராமில் அஜ்மல் ஷெரிப்பை 14 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர்.
இந்நிலையில், அஜ்மல் ஷெரிப் நேற்று மாலை தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அஜ்மல், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படத்தை பகிர்ந்து அதில் ‘ஆர்ஐபி (RIP – Rest in Peace) அஜ்மல் ஷெரிப் 1995 – 2023’ என பதிவிட்டுள்ளார்.
அஜ்மல் ஷெரிப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நல்ல வேலை கிடைக்காததால் அஜ்மல் ஷெரிப் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகவும், இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.