ஆந்திராவில்..
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சிகுருவாட கிராமம் ஒய்எஸ்ஆர் காலனியை சேர்ந்தவர் கோவிந்த். இவருக்கும் சித்தூர் மாவட்டம் புஷ்கனிவாரி பள்ளியை சேர்ந்த மானசா என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்குப் பின் இருவரும் சிகுருவாடாவில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். இந்த நிலையில் மானசா, தன் கணவன் கோவிந்திடம் தனிக் குடித்தனம் போகலாம் என்று கேட்டுள்ளார்.
இதையடுதது மனைவியின் ஆசைப்படி பத்து நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தனிக் குடித்தனம் சென்றுள்ளனர். இதையடுத்து கடந்த 15 ஆம் தேதி கோவிந்தின் அண்ணன் பாஸ்கருக்கு பதட்டத்துடன் போன் செய்த மானசா,
உங்கள் தம்பிக்கு என்னவோ ஆகிவிட்டது. கீழே விழுந்து கிடக்கிறார் என்று கூறியுள்ளார். இதனையடுத்து தகவல் அறிந்த பாஸ்கர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் அங்கு சென்ற போது கோவிந்த் உயிரிழந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து எப்படி நடந்தது என்று கோவிந்த் குடும்பத்தினர் மானசாவிடம் கேட்டுள்ளனர். அப்போது கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்று மானசா தெரிவித்துள்ளார். அவருடைய பேச்சை உண்மை என்று நம்பிய,
கோவிந்த் குடும்பத்தினர் உடலை சொந்த ஊரான வெதுருகுப்பத்திற்கு கொண்டு சென்றனர்.அப்போது கோவிந்த் கழுத்தில் காயம் இருந்ததைக் கண்டு சந்தேகமடைந்த பாஸ்கரன், போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மானசாவிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.
அப்போது அதில், கடந்த 15 ஆம் தேதி கோவிந்த் வீட்டிற்கு ஒரு இளைஞர் வந்து சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக மானசாவிடம் விசாரித்த போது, மதனப்பள்ளியை சேர்ந்த இளைஞர் சிம்மாதிரியும் நானும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தோம். எங்கள் காதலை விரும்பாத பெற்றோர் கோவிந்துக்கும் எனக்கும் திருமணம் செய்து வைத்து விட்டனர்.
இந்த திருமண பந்தத்தில் இருந்து விடுபட முடிவு செய்து என் காதலனை வரவழைத்து தூங்கிக் கொண்டிருந்த கோவிந்த் கழுத்தை இரண்டு பேரும் சேர்ந்து நெரித்து கொலை செய்தோம்” என்று மானசா கூறியுள்ளார். இதையடுத்து இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.