கர்நாடக மாநிலம், சிக்கமகளூருவில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த திரிப்தி என்ற பெண், காதலனுடன் ஒரு மாதம் குடும்பம் நடத்தியுள்ளார். திடீரென போலீசாரின் அறிவுரையால், கள்ளக்காதலனை பிரிந்து கணவனுடைய வாழ்ந்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கள்ளக்காதலன் வீடு புகுந்து அவரை தாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகள் கண் முன்னே நடந்த இந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா கிச்சப்பி கிராமத்தை சேர்ந்தவர் ராஜூ என்பவருடைய மனைவி திரிப்தி (வயது 25). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள்.
இந்தநிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தாவணகெரே மாவட்டம் சன்னகிரியை சோ்ந்த சிரஞ்சீவி என்பவருக்கும், திரிப்திக்கும் பேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. இந்தநிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிரஞ்சீவி, திரிப்தியை பெங்களூருவுக்கு அழைத்து சென்றுவிட்டார்.
இதனால் 2 குழந்தைகளையும் வைத்துக் கொண்டு ராஜூ தனியாக தவித்து வந்தார். இதுகுறித்து அவர் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் பெங்களூருவில் இருந்த திரிப்தியை கண்டுபிடித்து சமரசமாக பேசி அறிவுரை கூறி கணவருடன் அனுப்பி வைத்தனர்.
இதனிடையே ஒரு மாதமாக தன்னுடன் குடும்பம் நடத்திய திரிப்தி தனக்கு கிடைக்காததால் சிரஞ்சீவி ஆத்திரத்தில் இருந்து வந்தாா். மேலும், அவர் பலமுறை திரிப்தியை செல்போனில் தொடா்பு கொண்டு பேச முயன்றுள்ளார்.
ஆனால், செல்போன் சுவிட்ச்-ஆப் என்று வந்துள்ளது. இதனால் நேற்று மதியம் சிரஞ்சீவி பெங்களூரில் இருந்து ராஜூவின் வீட்டுக்கு வந்தார். அப்போது ராஜூ வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில், வீட்டில் தனியாக இருந்த திரிப்தியை புருஷனைவிட்டு பிரிந்து என்னுடன் வாழ்வதற்கு வா என்று சிரஞ்சீவி அழைத்துள்ளார். அதற்கு அந்த பெண் மறுத்துள்ளார்.
இதில் திடீரென்று ஆத்திரமடைந்த சிஞ்சீவி, தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால், திரிப்தியை அவரது 2 குழந்தைகளின் கண் முன்னே சரமாரியாக குத்தினார்.
இதில் திரிப்தி சரிந்து விழுந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். குழந்தைகள் இதை கண்டு கதறி அழுதனர். பின்னர் திரிப்தியின் உடலை பல அடி தூரம் இழுத்து சென்று அருகில் இருந்த விவசாய பண்ணை குட்டையில் வீசிவிட்டு சிரஞ்சீவி அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிரஞ்சீவியை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.