போலீசார் தொடர்ந்து மிரட்டி பணம் பறிப்பதாக விரக்தியில் இருந்து வந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பிலியனூர் பகுதியைச் சேர்ந்த அரிசி ஆலை உரிமையாளர் முனியப்பனின் மகன் புகழேந்தி (28) . இவர் தனியார் ஹோட்டலில் கள்ளக்காதலியுடன் தனிமையில் இருந்துள்ளார்.
இதனை ரகசிய கேமராக்கள் மூலம் வீடியோவாக எடுத்த நிர்வாகிகள் மனைவிக்கு அனுப்பி விடுவதாக மிரட்டி தொடர்ந்து பணம் பறித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகழேந்தி புகார் அளித்தநிலையில்,
இதனை அறிந்த காவல் உதவி ஆய்வாளரும் கடந்த மூன்று ஆண்டுகளாக அவரை மிரட்டி பணம் பறித்து வந்ததாக புகார் எழுந்துள்ளது.
கடன் வாங்கி பணத்தை திருப்பிச் செலுத்துவதற்காக தனது வீட்டு நகைகளை அடகு வைத்த பிறகு குடும்பத்தினருக்கு உண்மை தெரியவந்தது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான புகழேந்தி இன்று காலை தனது அரிசி ஆலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதன் எதிரொலியாக அவரது உறவினர்கள் பென்னாகரம் அம்பேத்கர் சிலை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து முற்றுகை விலக்கிக் கொள்ளப்பட்டது.