காசிமேடு திடீர் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் உலகநாதன் (33), இவருடைய மனைவி மாலதி (30). இவர்கள் மீது கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்தபோது மர்ம நபர்கள் 8 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் புகுந்து உலகநாதனை தலை, கை, கால் என பல இடங்களில் வெட்டியது.
தடுக்கச் சென்ற மனைவிக்கும் நெற்றி, பின் தலை போன்ற இடங்களில் வெட்டி விட்டு அந்த கும்பல் தப்பி ஓடியது. இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்த உலகநாதன் உயிரிழந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த மாலதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாலதி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சக்திவேல் உத்தரவின்பேரில் உதவி ஆய்வாளர் பிரவீன் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது கடந்த ஏப்ரல் மாதம் தேசிங்கு என்பவரை கோபி என்கின்ற வெங்கடேஷ், அபி என்கின்ற அபினேஷ்,
வெங்கடேஷ் மற்றும் அவனுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்ததும், அந்த கொலை குற்றவாளிகளுக்கு உடந்தையாக உலகநாதன் இருந்ததால் அவரை கொலை செய்வதற்கு தேசிங்கு மகன் வல்லரசு திட்டம் தீட்டி கொடுத்து, நண்பர்களுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, தனிப்படை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு காசிமேடு பகுதியில் பதுங்கி இருந்த வல்லரசு (24), அவருடைய கூட்டாளிகள் அந்தோணி (21), எபினேசர் (24), எழிலரசன் (19),
மனோஜ் (19), குணசேகரன் (18), சலீம் (20) என 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சஞ்சய் என்பவரை தேடி வருகிறார்கள்.
தந்தையை கொலை செய்ததற்கு பழிவாங்க நண்பருடன் சேர்ந்து வல்லரசு திட்டம் தீட்டி கொலைக்கு உடந்தையாக செயல்பட்ட உலகநாதன், அவருடைய மனைவியை வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.