குழந்தை வரம் வேண்டி கோழிக்குஞ்சை உயிரோடு விழுங்கிய இளைஞர் உயிரிழப்பு.. ஜோதிடரால் நடந்த விபரீதம்!!

108

குழந்தைப்பேறு வேண்டும் என்றால் உயிரோடு ஒரு கோழிக்குஞ்சை விழுங்க வேண்டும் என்ற மூட நம்பிக்கையை நம்பிய இளைஞரின் உயிர் பிரிந்துள்ளது.

இந்திய மாநிலமான சத்தீஷ்கர் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள சிந்த்காலோ என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் யாதவ் (வயது 35). இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன பின்னரும் குழந்தை இல்லை.

இதற்காக மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்ட பின்னரும் குழந்தைபேறு இல்லை. இதையடுத்து, தந்தையாக வேண்டும் என்ற ஆசையில் பல்வேறு பரிகாரங்களை ஆனந்த் யாதவ் செய்து வந்தார்.

இந்நிலையில், குழந்தை வரம் வேண்டி உள்ளூர் ஜோதிடர் ஒருவரை ஆனந்த் யாதவ் அணுகியுள்ளார். அப்போது அவர், “குழந்தைப்பேறு வேண்டும் என்றால் உயிரோடு ஒரு கோழிக்குஞ்சை விழுங்க வேண்டும்” என்று கூறினார்.

இதனால், உயிருடன் இருக்கும் கோழிக்குஞ்சை அவர் விழுங்கியுள்ளார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு தெரியாது. பின்னர் அவர் மயங்கி விழுந்ததும் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர்.

ஆனால், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று கூறினர். பின்னர், அவருக்கு பிரேத பரிசோதனை மேற்கொண்டபோது அவரது தொண்டையில் ஒரு கோழிக்குஞ்சு சிக்கி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.


அதுவும், கோழிக்குஞ்சு உயிருடன் இருந்துள்ளது. மூட நம்பிக்கையால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.