கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் கணவருக்கு ஜூஸில் விஷம் கலந்து கொடுத்த இளம் மனைவி!!

17

தமிழகத்தில் கடலூர் மாவட்டம் அயன் கருவேப்பம்பட்டியில் வசித்து வருபவர் 27 வயது கலையரசன். இவருக்கு ஜனவரி 26ம் தேதியன்று திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் திருமணமான ஒரு மாதத்திற்குள் கலையரசனை அவரின் மனைவி ஜூஸில் விஷம் கலந்து கொடுத்துள்ளார். இதனால் தற்போது கலையரசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்த விவகாரத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக, கடலூர் எஸ்.பி அலுவலகத்தில் கலையரசனின் சகோதரர் சூர்யா புகார் மனு அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து சூர்யா, ‘எனது அண்ணண் கலையரசனுக்கு ஜனவரி 27ம் தேதி திருமணம் நடந்தது.

திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு மணப்பெண் விஷம் குடித்துவிட்டார். இது குறித்து பெண் வீட்டாரிடம் கேட்டதற்கு குடும்பப்பிரச்னை என கூறி சமாதானம் செய்து திருமணத்தை நடத்திவிட்டனர்.

திருமணம் முடிந்த அன்று இரவு முதலிரவின் போது, நான் வேறு ஒருவரை காதலிப்பதாக மணப்பெண், எனது அண்ணணிடம் கூறினார். மேலும் அவர் காதலிக்கும் அந்த நபருடன் அவர் வீடியோ காலிலும் பேசியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த என் அண்ணண் இதுபோன்று செய்யக்கூடாது என சமாதானம் செய்திருக்கிறார். இது குறித்து பெண் வீட்டு உறவினர்களுக்கும் தெரியப்படுத்தினார்.


பிப்ரவரி 12ம் தேதி எனது அண்ணனின் மனைவி அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கிருந்து என் அண்ணண் எங்கள் வீட்டுக்கு வந்த பிறகு, பெண் வீட்டைச் சேர்ந்தவர்கள் சிலர் எங்கள் வீட்டுக்கு வந்து,

எங்கள் பெண் என்ன தப்பு செய்தாலும் நீ அவளுடன் தான் வாழ வேண்டும் என கூறி என் அண்ணணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், இரவு 12 மணிக்கு என் அண்ணணை கட்டிப்போட்டும் அடித்தனர்.

இதனையடுத்து, 3 நாட்களுக்கு பின்னர் அண்ணன் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியபோது அவர் தனது மனைவியிடம் டீ கேட்டுள்ளார். ஆனால் ஜூஸ் தருகிறேன் என ஜூஸ் கொடுத்துள்ளார்.

இதை குடித்த பின் என் அண்ணணுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மயக்கமடைந்த அவரை எழுப்பிய அப்பெண் ஜூஸில் விஷம் கலந்து கொடுத்ததாகவும், எனது தாய்மாமன்கள் சொல்படியே இவ்வாறு செய்ததாகவும் கூறியிருக்கிறார்.

உடனடியாக நாங்கள் அண்ணணை புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மரில் சேர்த்தோம். சிதம்பரம் நடுவர் நீதிமன்றத்தில் இருந்து வந்த நீதிபதி மருத்துவமனையில் என் அண்ணணிடம் வாக்குமூலம் பெற்று சென்றார்.

இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம்’ என்றார்.

கேரளாவில் ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து காதலனை கொலை செய்த வழக்கில், காதலி கிரிஷ்மாவுக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. தற்போது இதேபோன்று கடலூரிலும் நடந்திருப்பது பெரும் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.