தங்களது கைகளைக் கயிற்றால் கைகளைக் கட்டிக் கொண்டு ஏரியில் குதித்து காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூரு மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு தலகட்டாபுரா அருகே அஞ்சனாபூரைச் சேர்ந்தவர் அஞ்சனா(20). இவர் பிபிஏ படித்து வந்தார். கோனானகுண்டே பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்(24) பி.காம் படித்து வந்தார்.
கடந்த சில ஆண்டுகளாக அஞ்சனாவும், ஸ்ரீகாந்தும் காதலித்து வந்தனர். இதில் ஸ்ரீகாந்த் ஏற்கெனவே திருமணமானவர். இவர்களின் காதலுக்கு மாணவியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
‘இந்நிலையில், ஜூலை 1-ம் தேதி காணாமல் போனார்கள். இது தொடர்பாக அவர்கள் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கோணனகுண்டே மற்றும் தலகட்டாப்புரா ஆகிய காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து போலீசார் அவர்களைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில் நைஸ் சாலை அருகே உள்ள ஏரியில் கயிற்றால் கைகளைக் கட்டிய நிலையில் அஞ்சனாவும், ஸ்ரீகாந்தும் இன்று இறந்து கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் விரைந்து சென்று இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அஞ்சனா, ஸ்ரீகாந்த் காதலுக்கு கடும் எதிர்ப்பால், இருவரும் ஒன்றாக ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெற்கு பிரிவு டிசிபி லோகேஷ் ஜகலாசர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ” அஞ்சனா இறப்பதற்கு முன் தனது செல்போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், நாங்கள் ஒன்றாக வாழ முடியாது. அதனால் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று பேசி பதிவிட்டு அந்த பகுதியில் நின்ற ஆட்டோவில் செல்போனை வைத்து விட்டு ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
முதலில் ஏரியில் ஸ்ரீகாந்தின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடலைத் தூக்கும் போது தான் அஞ்சனாவின் சடலமும் வெளியே வந்தது. அப்போது தான் அவர்கள் கைகளில் கயிறு கட்டப்பட்டது தெரிய வந்தது” என்றார்.