கொரோனா பாதித்தவரின் உடலை ஐஸ்கிரீம் ஃப்ரீஸரில் வைத்திருந்த உறவினர்கள்..!

1076

இந்திய மாநிலம் மேற்குவங்கத்தில் மருத்துவரின் சான்றிதழ் கிடைக்காததால், கொரோனா பாதித்து உயிரிழந்த முதியவரின் உடலை குடும்பத்தினர் ஐஸ்கிரீம் ஃப்ரீஸரில் வைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

கொல்கத்தாவில் கடந்த ஜூன் 29 ஆம் திகதி மூச்சுத் திணறலால் 71 வயது முதியவர் உயிரிழந்தார்.

ஆனால், அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவு கிடைக்காமல், இறப்புச் சான்றிதழ் அளிக்க முடியாது என்று மருத்துவர் கூறிவிட்டார்.

முன்னதாக மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவரிடம் அந்த முதியவர் சென்றுள்ளார். அவரை உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யுமாறு மருத்துவர் பரிந்துரைக்க, கொரோனா பரிசோதனை செய்துவிட்டு வீட்டுக்கு வந்த முதியவர் மரணம் அடைந்து விட்டார்.


இதனால், கொரோன பரிசோதனை முடிவுகள் வரும் வரை மருத்துவரின் இறப்புச் சான்றிதழ் கிடைக்காமல், உடலை நல்லடக்கம் செய்யவும் முடியாமல், உடலை அரசு மருத்துவமனைகளில் வைத்துப் பராமரிக்கவும் வசதி இல்லாமல், குடும்பத்தினர் செய்வதறியாது கவலைகொண்டனர்.

முதியவரின் குடும்பத்தினர், இதற்கு உதவி கேட்டு சுகாதாரத்துறை, மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை என பலரிடமும் உதவி கோரினர். ஆனால் எங்கும் உதவி கிடைக்காததால், வீட்டில் இருந்த ஐஸ்க்ரீம் ஃபிரீஸிரில் முதியவரின் உடலை கிடத்தி வைத்தனர்.

ஜூன் 30 ஆம் திகதி அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், ஜூலை 1 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு மாநகராட்சி ஊழியர்கள் வீட்டுக்கு வந்து அவரது உடலை எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்தனர்.

முதியவர் மரணம் அடைந்து 50 மணி நேரம் கழித்து, அவர் வசித்து வந்த பகுதியில் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டது.